தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு

கொரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கும் வரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டமே.

மதத்தைக் காரணங்காட்டிக் குடியுரிமை வழங்க மறுப்பதற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த சிக்கல்களில் ஒன்று ஈழத்தமிழ் ஏதிலியர் தொடர்பானது. கொரோனாவினால் அரசின் நடவடிக்கையும், அதற்கு எதிரான போராட்டமும் தள்ளிப்போயின. கொரோனா நெருக்கடி தணியும் போது, அவை மீண்டும் முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

கொரோனாவின் நலவாழ்வியல் நெருக்கடியாலும், இன்னும் கூடுதலாகவே பொருளியல் நெருக்கடியாலும் அனைத்துத் தரப்பினரும் தாக்குண்ட போதிலும், ஒடுக்கப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் கூடுதலாகவே தாக்குண்டார்கள். இந்த வகையில் இந்தியாவிலும் ஏதிலியர் ஆகப்பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். தமிழ்நாட்டில் வழக்கமான பிழைப்பு வழிகளும் அடைபட்டுப் போய், ஈழத்தமிழ் ஏதிலியர் பட்ட துயரம் பற்றிய தரவுகள் இன்னும் முழு அளவில் வெளிப்படாமலே உள்ளன.

3 1 தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு

ஏதிலியர் நலன் என்பது உரிமைகள் தொடர்பானதே தவிர, அரசுகளின் தயவில் யாரோ சிலர் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுக் கொள்வது பற்றியதன்று.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் சட்டப்படியான தகுநிலை என்ன? 1980களின் தொடக்கத்திலிருந்து ஈழத் தமிழ் மக்கள் சற்றொப்ப இரண்டு இலட்சம் பேர் வரை இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அகதிமுகாம் எனப்படும் முகாம்களிலும், இன்னும் பாதிப்பேர் வெளியிலும் வசிக்கின்றனர். நிர்க்கதியாகத் தவித்துக் கிடக்கும் இம்மக்களில் யாருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, பன்னாட்டுச் சட்டங்களின் படி அவர்கள் ஏதிலியராகக்கூட நடத்தப்படுவதில்லை.

ஏனென்றால் இந்திய நாடு ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951ஆம் ஆண்டின் ஐ.நா ஒப்பந்தத்திலோ, அடுத்து வந்த 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ ஒப்பமிடவில்லை. இன்று வரை ஒப்பமிட மறுத்தும் வருகிறது.

இலங்கைத் தீவிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலியர் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக நாடற்றவர்களாக அல்லலுற்றுக் கிடக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களுக்கு இடைக்காலக் குடியுரிமைகூட வழங்கப்படவில்லை, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஏதிலியர் குழந்தைகளும் அதே அவல நிலையில்தான் உள்ளனர்.

குடியுரிமை இருக்கட்டும், அவர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தேறிய அயலார் என்பதே அவர்களின் சட்டநிலை. ஒரு சாதியில் பிறந்தவர் இறுதி வரை அந்தச் சாதியில்தான் இருந்தாக வேண்டும் என்பது போல் இந்தியாவில் அகதிக்குப் பிறந்தவரும் அகதியாகத்தான் இறுதி வரை இருந்தாக வேண்டும். எத்தனை தலைமுறைகளானாலும் அகதிக்கு அகதிநிலையிலிருந்து விடுதலை கிடையாது.

1 8 1 தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு

ஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது, மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன.

இந்தச் சாற்றுரையின் உறுப்பு 14, தஞ்சம் கோரவும், பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு ஏதிலியர் உரிமை தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களையும் மதிப்பதில்லை, உள்நாட்டிலும் சட்டம் இயற்றுவதில்லை என்று உறுதியாகவுள்ளது. ஏதிலியர் சிக்கலைப் புவிசார் அரசியல் நலன், உள்நாட்டு அரசியல் நலன் என்ற கோணத்திலிருந்தே அணுகுவதுதான் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பதினோராம் உறுப்பைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 என்பது. இந்தச் சட்டமும் சட்டப் புறம்பான குடியேறிகள் (illegal immigrants) பற்றிப் பேசுகிறதே தவிர, ஏதிலியர் (அல்லது அகதிகள்) குறித்து எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் ஏதிலியர் பற்றிப் பேசும் சட்டமே இல்லை.

அதாவது இந்திய அரசைப் பொறுத்தவரை, ஏதிலியர் தொடர்பான பன்னாட்டுச் சட்டமும் இல்லை, உள்நாட்டுச் சட்டமும் இல்லை என்பதே உண்மை. இந்த சட்ட வெறுமைதான் ஈழத் தமிழ் ஏதிலியரை உரிமையற்ற அடிமை நிலையில் வைத்துள்ளது. பன்னாட்டுச் சட்டங்கள் அறிந்தேற்றுள்ள ஏதிலியர் உரிமை எதுவும் அவர்களுக்குப் பொருந்தாது. உள்நாட்டளவிலோ அவர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்நோக்கும் நிலைதான்!

4 2 தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு

ஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.  மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன.

இந்தச் சாற்றுரையின் உறுப்பு 14, தஞ்சம் கோரவும், பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ், பாஜக எந்தக் கட்சியின் தலைமையில் என்றாலும் இந்திய அரசு ஏதிலியர் சிக்கலுக்குச் சட்டப்படியான தீர்வு காண்பதை விடவும், ஏதிலியரைப் புவிசார் அரசியல் சதுரங்கப் பலகையில் பகடைகளாக நகர்த்தவே விரும்புகிறது.

எனவே, தமிழகத்தில் இயங்கி வரும் ஈழத் தமிழ் ஏதிலியர் கூட்டமைப்பு வலியுறுத்தும் கோரிக்கைகளில் முதன்மையான ஒன்று இந்திய அரசு பன்னாட்டுச் சட்டங்களை மதிக்கவும் ஏதிலியர் உரிமை தொடர்பான உள்நாட்டுச் சட்டம் இயற்றவும் வேண்டும் என்பதாகும்.

இனவழிப்புக் குற்றத்தால் துயரப்பட்ட — ஐ.நா அறிக்கைகளின்படியேகூட போர்க் குற்றங்களாலும் மாந்தப் பகைக் குற்றங்களாலும் துயரப்பட்ட — ஒரு மக்களினம் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அவ்வினத்தின் ஒரு கூறு இந்தியாவிலும் நாடற்ற அவலநிலையில் அல்லலுற்று வருவது தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ பெருமை சேர்ப்பதாகாது.

இந்தியாவிலேயே பிறந்து இந்தியாவிலேயே வளர்ந்த ஒருவருக்கும்கூட அவர் அகதி என்பதால் குடியுரிமை கிடையாது என்பது இந்த மாந்தவுரிமை ஊழிக்குப் பொருந்தக் கூடியதன்று. அமெரிக்காவிற்குப் பொருளீட்டச் சென்ற இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை தேவை என்றால், இந்தியாவிற்கு உயிர்பிழைக்க வந்த ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டாமா?

தமிழீழ ஏதிலியர் துயர் துடைப்பு மட்டுமன்று நம் கோரிக்கை. அவர்களுக்கு அரசியல் குடியியல் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இது இங்கு அவர்களின் வாழ்வைக் காத்துக் கொள்வதற்காக மட்டுமன்று. அவர்களை நாடற்றவர்களாக்கிய தாயக நிலைமையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக அறவழியில் போராடும் உரிமை வேண்டும். அகதி வாழ்விலிருந்து விடுபட்டு விடுமை வாழ்வு வாழ வேண்டுமானால், அதற்காக எங்கிருந்தாலும் போராடும் உரிமை வேண்டுமல்லவா?

இந்நாட்டுக் குடிமக்களுக்கு நிகரான அரசியல், குடியியல் உரிமைகள் வேண்டும் என வலியுறுத்தும் போதே, உடனடி வாழ்க்கைத் தேவைகளைக் கருதியும் சில கோரிக்கைகளை ஈழ ஏதிலியர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

2 2 தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு

இதோ எமது கோரிக்கைப் பட்டியல்:

  • இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும்.
  • தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும், நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால், தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிட வேண்டும்.
  • சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களை இழுத்து மூடிவிட வேண்டும்.
  • ஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல் கருதி நடத்துவதைக் கைவிட வேண்டும்; அவற்றில் காவல் துறை, உளவுப் பிரிவின் ஆதிக்கமும், தலையீடும் இல்லாமற் செய்ய வேண்டும்; ஏதிலியர்க்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசின் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களுக்கு வெளியேயும் ஏதிலியர் வாழ்வில் காவல் துறைத் தலையீடும் கெடுபிடியும் இல்லாமற் செய்ய வேண்டும்.
  • தமிழீழ ஏதிலியரின் கல்வியுரிமையும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்; ஏதிலிக் குழந்தைகள் அனைவர்க்கும் கட்டாய இலவயக் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏதிலி மாணவர்கள் இந்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பெற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும். தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு இப்போதுள்ள வழித் தடைகள் அனைத்தையும் களைந்திட வகை செய்ய வேண்டும்.
  • ஏதிலியரின் கண்ணியமிக்க மாந்த வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஏதிலியர் முகாம்களில் வீட்டு வசதியும் பிற குடிமை வசதிகளும் செய்துதர வேண்டும், ஏதிலியர்க்கான அரசின் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதை எமது தேசியக் கடமையாகவும், மாந்தவுரிமைப் பொறுப்பாகவும் கருதுகிறோம்.