Home செய்திகள் தமிழினப்படுகொலைக்கு நீதி – சாத்வீகப் போராளி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு…

தமிழினப்படுகொலைக்கு நீதி – சாத்வீகப் போராளி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு…

மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள சிறீலங்கா அரசிற்கு மேலும்  கால அவகாசம் வழங்குவதை உலக நாடுகள் நிறுத்துவதோடு, சிறீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக் குராலாய் பசித்திருந்து, நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர்  ஒன்பதாவது நாளை எட்டி நிற்கின்றது.

அம்பிகையின் உடல் நிலை மோசம் அடைந்து வரும் நிலையில், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழர் தாயக பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டங்களில் அரசியல் தலைவர்கள், அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் வாகனப்பேரணிகள் மற்றும் அம்பிகையின் போராட்ட இடத்திற்கு மக்கள் திரளாகச் சென்று   அப்போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

image 22 தமிழினப்படுகொலைக்கு நீதி - சாத்வீகப் போராளி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு…

அதே போல் மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்தும், அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள  சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேசத்தை நோக்கி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லை எனவும் சர்வதேச நீதிமன்றில் சிறீலங்காவை நிறுத்தி தமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும்  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,   குறித்த போராட்டத்தில் பங்குகொண்டுள்ளவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை  காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நல்லூர் – நல்லை ஆதீனம் அருகில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து, இணைந்து கொண்டுள்ளனர்.

1-இந்தப்  போராட்டத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறீலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2-தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version