தமிழர் தாயகத்திற்கு தடுப்பூசியை அனுப்புங்கள்: அமெரிக்காவிடம் கோரிக்கை

கோவிட் தடுப்பூசியை நேரடியாக தமிழர் தாயகத்திற்கு அனுப்புமாறு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனை கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இன்று (17) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

”அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வன்னியிலிருந்து ஒரு அன்பான கோரிக்கையை விடுக்கின்றோம். எங்களுக்கு அவசரமாக கோவிட் -19 தடுப்பூசி மற்றும் உணவுப்பொருட்கள் தேவை.

இந்த கோவிட் -19 தொற்றுநோயினால், தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோவிட் -19 தடுப்பூசியை நேரடியாக தமிழர் தாயகத்திற்கு அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கேட்டுக் கொள்கிறோம். தடுப்பூசி ஏற்றுவதற்கு சிவில் அல்லது இராணுவமாக இருக்கக்கூடிய சில மருத்துவ பயிற்சி பெற்றவர்களை அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்கள் உணவு, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாது தவிக்கிறார்கள். தொற்றுகாரணமாக தமிழ் தாயகத்தை பூட்டியதால், பெரும்பாலான தமிழர்களுக்கு தினசரி வருமானம் இல்லை. எனவே அவர்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லை.

ஆகவே ஜனாதிபதி பைடனை நேரடியாக தமிழ் பகுதிகளுக்கு உணவு வகைகளை அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம். ஒடுக்கு முறைகளை தவிர்க்க இது ஜனநாயகத்தில் ஒரு பங்காகும். அமெரிக்கா அவ்வாறு செய்யத் தவறினால், தமிழர்களுக்கு இன்னும் நிரந்தர பேரழிவு ஏற்படும்.காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்றுடன் 1582 வது நாளை கடக்கின்றது.

இந்நிலையில் சிறீலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதர் திருமதி ஜூலி சுங்கை வரவேற்கிறோம். இந்த ஆண்டில் எப்போதாவது ஒருநாள் அம்மையாரை சந்திக்க விரும்புகிறோம்” என்றனர்.