Tamil News
Home செய்திகள் தமிழருக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா? – ரெலோ கேள்வி

தமிழருக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா? – ரெலோ கேள்வி

துறைமுக நகர முகாமைத்துவத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சிறப்பு சட்ட மூலத்திற்கான பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் முலம் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஆணையாளராக நியமிப்பதற்கும், காணி மற்றும் நிதி அதிகாரங்களும் வழங்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கணிசமான உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் தேசிய இனமான நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக எங்களுக்கான அதிகாரங்களைப் பகிர, ஆகக்குறைந்தது மாகாணசபை அதிகாரங்களை, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பிரகாரம் முற்றுமுழுதாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு, வெளிநாடு ஒன்றுக்கு அதே அதிகாரங்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும் தேசிய அமைப்பாளரைமான சுரேந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“ஆதிக்குடிகளாக, தேசிய இனமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் எமது மக்களை சிறப்பாக நிர்வாகிக்கும் அதிகாரப் பரவலாக்கலாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாக ஜனநாயக வழியிலும் ஆயுதப் போராட்ட மூலமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எமது போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட அதே வேளையில் வெளிநாடு ஒன்றுக்கு தாம்பாளத்தில் வைத்து அதே அதிகாரங்களை அரசு கொடுக்க முற்படுவது எதற்காக?

வியாபார ரீதியாக அந்த துறைமுக நகரம் நாட்டுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கும் என்றால் நாம் கோரும் அதிகாரங்களை எங்களுக்கும் தாருங்கள். இதைவிட சிறந்த முறையிலே நாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தரும் தேசமாக மாற்றி அமைத்து காட்டுகிறோம்.

தனது நாட்டில் தேசிய இனத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி மறுக்கும் உரிமையை, வெளிநாட்டுக்கு வருமானம் என்ற நியாப்படுத்தலோடு வழங்குவது எப்படி? இதற்கு அரசு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version