Tamil News
Home செய்திகள் தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-செல்வம்

தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-செல்வம்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டுமொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்கமுடியாத தவறு என ரெலோவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:-

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு சுமந்திரன் இப்படியான கருத்துக்களைச் சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடைய கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத் தான் உலகளாவிய ரீதியில் எங்கள் இனப் பிரச்சினை வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசுடன் பேசும் ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் எங்கள் இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரியநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும். ஆயுதப் போராட்டம் அகிம்சைப் போராட்டம் செய்ய இந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசைப் பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தைத் தனது கருத்து ஊடாக சுமந்திரன் சீர்குலைத்துள்ளார். அந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது” என்றும் செல்வம் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version