தமிழனத்தின் காவலனின் இழப்பு பேரிழப்பாகும் -வினோ நோகதாரலிங்கம்

எவருக்கும் அடி பணியாமல் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழனத்தின் காவலனின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ் அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“அகில உலகமே போற்றுகின்றி வணங்குகின்ற ஓர் ஒப்பற்ற ஆன்மீக தந்தையை நம் நாடு இன்று இழந்திருக்கின்றது. அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்புயோசப் ஆண்டகையின் உடலும் உருவமும் பௌதீக இழப்புக்குள் செல்வது இறைவிதி ஆகும். மனிதகுலத்தின் குறிப்பாக தமிழ்தேசிய நெஞ்சங்களில் வியாபித்து நிற்கும் உயிரும் உணர்வும் மௌனிக்க முடியாதது.

பேரருட்திரு ஆண்டகையின் ஓருயிர் ஓராயிரம் கோடி உயிர்களிடம் சங்கமித்துவிட்டது. இனம் மதம் மொழி தேசம் கடந்து ஒரு ஆன்மீகப் பணியாளனின் உயிர் உச்சரிப்பை வரலாறு எல்லோருக்கும் தந்துவிட்டுச் செல்வதில்லை.

அரசியல் பணியாளனாக தந்தை செல்வாவை அடையாளப்படுத்திச் சென்ற வரலாற்றைப் போல அந்த வெற்றிடத்தை அரசியல் ஆன்மீக சமூகவிடுதலை உரிமைசார்ந்த அனைத்துப் பரிமாணங்களிலும் ஒன்றித்து பயணித்து வரலாற்று சாட்சியமாக ஆயர் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆயரின் பணிக்காலம் என்பது போர் முனைகள் ஆயுத அடக்குமுறைகள் சூழ்ந்திருந்தகாலம். தமிழ் தேசிய தரப்புக்கள் கூட முரண்பாடுகளை கொண்டிருந்த காலம்.  தமிழ் பேசும் இனம் கடந்த கால அனுபவங்களை மறந்து ஒன்றுபட வேணும் என்றும் குரல் கொடுத்து அதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தவர்.

ஆயரின் அழைப்பையோ அறிவுரைகளையோ எந்ததரப்பினரும் நிராகரிப்பதில்லை. உறுதியான தூய்மையான எண்ணங்களை கொண்டிருந்தவர். தனது பணிகளை தனது சக்திக்கும் இயலுமைக்கும் ஏற்றாற்போல பூரணப்படுத்தி மக்கள் மனங்களில் எப்போதும் வாழ்வதற்கானவராக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இராயப்புயோசப் ஆண்டகை பெருந்தேசியவாத சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். ஒரு இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த இனத்துவேசிகள் ஆயரையும் அப்பட்டியலில் இணைத்து முத்திரை குத்தினர். புலிகளாக சித்தரித்தனர்.

பயமுறுத்தல்கள் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் சரியானதையும் உண்மையானதையும் நேர்மையான பாதை அமைத்து துணிவுடன் பயணித்தார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் அடிபணியாமல் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். உலகின் மூலை முடுக்குகளெல்லாம் அவரின் உரிமைக்குரல் பதிவாகியது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை உழைத்த ஓர் உத்தமனின் உயிர்ப்பிரிவானது கோடானுகோடி இதயங்களை கதறி அழச் செய்துள்ளது. உலக சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கங்களும் அவரால் நிரப்பப்பட்டிருக்கும். நீண்ட பலகாலம் காத்திருந்தும் ஆயரின் வெற்றிடம் அடைக்கப்படும் என உறுதியாக்கம் செய்யப்படப்போவதில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் அயராது உழைத்து களைத்துப்போய் துயில் கொள்ளும் ஆண்டகைக்கு எங்கள் இறுதி அஞ்சலிகளை காணிக்கையாக்கி அவர் தம் ஆன்மீக அரசியல் சமூக விடுதலைப் பாதையில் பயணிக்க அவர்தம் கனவுகள் மெய்ப்பட அவர் நாமம் சுமந்து எங்கள் வாழ்வையும் அர்ப்பணிப்போம்” என்றார்.