Tamil News
Home செய்திகள் தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப் படுத்தும் இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப் படுத்தும் இலங்கை கடற்படை

கடந்த 4ம் திகதி இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்திருந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றருக்கின்றனர்.

இந்த சூழலில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 11 நாட்டுப் படகுகளை சிறைபிடித்து அதில் இருந்த 86 மீனவர்களையும் கைது செய்திருக்கின்றனர்.

“இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத குடியேறிகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக பாக் நீரிணை ஒட்டிய கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்பகுதிக்குள் 11 இந்திய மீன்பிடி படகுகள் மூலம் 86 பேர் நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது,” என இலங்கை கடற்படை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படை தரப்பில் தமிழக மீனவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தியிருப்பது மீனவர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே சமயம் இந்திய தரப்பில் கைது செய்யப்பட்ட 86 பேரையும் மீனவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பும் எண்ணத்தில் இந்த மீனவர்கள்  வெளியேறி இருக்கக்கூடும் என இலங்கை கடற்படை கூறியிருக்கிறது.

Exit mobile version