Tamil News
Home செய்திகள் தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் நளினி...

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் நளினி புதிய மனு தாக்கல்

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இன்றி தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் நளினி இன்று (28) சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்று வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டெம்பர் 9ஆம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2018 செப்டெம்பர் 11ஆம் திகதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், தன்னை விடுதலை செய்யக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகளான ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தமிழக அரசு தீர்மானம் வெறும் பூஜ்ஜியமே என்றும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நளினி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், அது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதானது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தான் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் செயற்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரின் வழக்கில் பிறப்பித்த தீர்ப்பிற்கு எதிராக செயற்படுவதாகவும், எனவே ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Exit mobile version