தமிழகம் பழைய  நிலையில் இன்று இல்லை – ஊடகவியலாளர் ஹாசீஃப் (Haseef)

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய Family man 2 என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியருந்தார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர், சினிமாத் துறையைச் சேர்ந்த சிலர் இத் தொடர் குறித்து தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஹாசீஃப் (Haseef) அவர்கள் இலக்கு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

கேள்வி – 120 மில்லியன் மக்களைக் கொண்ட உலகத் தமிழினத்துக்கு எதிரான எந்தச் செயற்பாடும் அவர்களுக்குத் தாக்கம் தரும் என்ற பயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு  ஏற்படும் போது தானே நீண்டகால நோக்கில் இப்படியான செயற்பாடுகளை நிறுத்த முடியும். இது தொடர்பான உங்களது பார்வை என்ன?

தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்ற  ஒரு பயம்  எப்போது  எதிர்த் தரப்பினருக்கு வரும் என்றால், அவர்களுடைய வினைக்கு தமிழ் மக்களினுடைய எதிர்வினை எப்படி அமைகிறதோ அதை பொறுத்து தான் அது பயம்  என்று ஏற்படும்.

கடந்த 2009 இனப்படுகொலை நிகழ்வு நடந்த பின் அடுத்த வந்த ஐந்து ஆண்டுகள் தமிழ் நாட்டிலேயே கூட ஈழத் தமிழர்களுக்கு எதிராக யாரும் துணிவுடன் எதையுமே செய்ய முடியாது, பேசிட முடியாது. அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் ஒரு கொதி நிலை இருந்தது. ஆனால்  கருணாநிதி மற்றும்   ஜெயலலிதா  ஆகியோரின் மறைவுக்குப் பிறகு  பாஜக தமிழகத்தில்  ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது.

அதைத் தொடர்ந்து பாஜக சொல்கின்றதைக் கேட்கக் கூடிய ஒரு அரசு    உருவாகி இருந்தது.   கடந்த 4, 5 ஆண்டுகளில்   ஒட்டு மொத்தமாக  ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்கின்ற நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கிறது. ஆகவே அந்த எதிர் வினை என்பது தமிழ் நாட்டிலேயும் இன்று இல்லை.

கடந்த காலங்களில்  ஈழத்தில் ஒரு பிரச்சனை என்றால், முதல் குரல் எழுப்பக் கூடிய இடமாக தமிழ்நாடு இருக்கும். தமிழக அரசியல்  அவ்வாறு இருந்தது. இன்று முற்று முழுதாக தலைகீழா மாறி இருக்கின்றது.

ஒட்டுமொத்த 120 மில்லியன் என்ற அந்த கணக்கை சொல்லுறீர்கள், அதில்   7 கோடி அல்லது 8 கோடி மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

அந்த 8 கோடி மக்களினுடைய   எதிர்வினை இன்று இல்லாமல் போகும் நிலை,  அச்சமில்லாத ஒரு சூழலுக்கு எதிர் தரப்பினரை கொண்டு போய் நிறுத்தி இருக்கின்றது. அதனால் தான் இன்று இப்படிப்பட்ட படங்கள் வெளிப்படையாகவே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். பிரபாகரனுடைய நடவடிக்கை, அதாவது பிரபாகரன் குடிக்கிறார். அவர் தன்னுடைய சொந்த குடும்பத்திற்காக அவர் சாகின்ற வரைக்கும் ஏற்று நின்ற ஒரு இலட்சத்தில் இருந்து விலகி போகின்றார் என்று அச்சமின்றி துணிவுடன்   ஒரு படம் எடுக்க முடிகின்றது.

எனவே தமிழகத்தை  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான  பழைய நிலைமைக்கு கொண்டு போக வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளை  மீளாய்வு செய்து, இனம் மற்றும் தமிழ் உணர்வை  மீட்டெடுக்க வேண்டியிருக்கின்றது.

தமிழ் இனம் சம்பந்தமாக எதனையும், யாரும், எப்படியும் செய்யலாம். இந்த இனம் ஒன்றுபட்டு அறிவுபூர்வமாக செயற்படாது என்ற எண்ணம் இப்படியான செயற்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறதா?

தமிழகம் பழைய  நிலையில் இன்று இல்லை.   தமிழகத்தை ஒரு பழைய  நிலைக்கு கொண்டு  செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. அப்படி கொண்டு செல்லும் போதுதான் இப்படிப்பட்ட ஒரு விஷயம் ஏற்படும்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டும் ஈழத் தமிழர்களுடைய ஆதரவு தமிழ் இனத்தினுடைய அடிப்படை  என்று பார்க்க முடியாது.  உலகளாவிய அளவில் தமிழினம் இன்றைக்கு பரந்து கிடக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்கள்   பலநாடுகளில வாழ்கின்றனர்.  எனவே அவர்களுடைய அரசியல் என்பது ஒரு தேசிய விடுதலை.

எனவே அந்த தேசிய விடுதலையை கோரக்கூடிய  ஈழத்தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளிலும் கூட இந்த தேசிய போராட்டத்தை முன்னெடுக்க   கட்டமைக்கப்பட்ட அமைப்புகளில் மக்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய ஒரு ஒருங்கிணைவும்  தேவைப்படுது. அதே போல் எங்கெங்கெல்லாம்   இனரீதியாக மதரீதியாக வர்க்க ரீதியாக  ஒடுக்கு முறைகள் நடைபெறுகிற நேரங்களில், ஒடுக்கப்படக் கூடிய மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பரந்து இருக்கக் கூடிய ஈழத்தமிழ் மக்களும் அவர்களோடு சேர்ந்து குரல் கொடுக்கும்  போது தான்  பலம் பெறுவதற்கான வாய்ப்பிருக்கின்றது.

தமிழர்களாக தனித்து நிற்காமல்,   ஒடுக்கப்பட்ட மக்களாக ஒன்று சேர வேண்டிய தேவை இருக்கின்றது.   உதாரணமாக  நாளைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது ஏற்படும் பட்சத்தில்,  இதே போல் தேசிய ரீதியாக ஒடுக்கப்படக் கூடிய பல இனங்கள்,  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக  குரல் கொடுக்கும்.