தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னார் இளைஞர் இருவர் கைது

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பைப்பர் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்து இறங்கியதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் பிடித்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள்; மன்னார் மாவட்டம் கடம்பன்; பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஷ் என்பது தெரியவந்தது. இவர்களை திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறி தமிழகத்திற்கு வரவழைத்தாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னாரை சேர்ந்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக 2 இளைஞர்கள் கடல் வழியாக தமிழகத்திற்க்குள் நுழைந்தது பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.