தமிழகத்திலிருந்து படகு மூலம் வேலனையில் வந்திறங்கிய நபரால் தீவகத்தில் பதற்றம்: கைதாகி தனிமைப்படுத்தப்பட்டார்

தமிழகத்தில் இருந்து படகு ஒன்றின் ஊடாக நேற்று வேலணைக்கு வந்திறங்கிய ஒருவர் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என குடாநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தப்பி வந்தவரால் வேலணையில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்ககள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த சுகாதார அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து தப்பி வந்த நபரை தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர். வேலணை 2 ஆம் வட்டாரத்தைச் 29 வயதான ஒருவரே விசாரணைகளின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தீவிகப் பகுதிகள் தமிழகத்தில் இருந்து மிக அண்மையில் இருப்பதால் இங்கு மேலும் பலர்தப்பி வரக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பி வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இரகசியமாக சமூகத்தில் நடமாடினால் கொரோனா தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோமாக வருபவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனதீவகப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இவ்வாறு தமிழகத்தில் இருந்து தப்பி வரக்கூடியவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக் குறித்து ஏற்கனவே வட பிராந்திய சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.