தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன-இராஜரட்ணம்  கிரிசாந்தன்

‘தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன,மேலும் வலுவாக சமூகத்திற்கு தன்னெழுச்சியாக தொடர்ந்து பணியாற்ற வழி ஏற்படுத்தி தருகின்றன‘ என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்  ஒன்றியத் தலைவர்  இராஜரட்ணம்  கிரிசாந்தன் இலக்கிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி – மாவீரர் நாளையொட்டி பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தமை பற்றி உங்கள் கருத்தென்ன?

வழமையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் அரச சொத்து என்ற ரீதியில் அங்கு மாவீரர்களுக்கான நினைவு தினங்களை செய்வதை அனுமதிப்பதில்லை. அவ்வாறான சூழலே இம்முறையும் காணப்பட்டது. எனினும் இம்முறை நிர்வாகத்தினருக்கும் வந்த கடும் அழுத்தத்தினால் அவர்களும் அவ்வாறான ஒரு நடைமுறையை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள் கருதுகின்றோம்.

கேள்வி – இவ்வாறான பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டபூர்வமானதா?  இது மாணவர்களின்  உரிமைகளை புறந்தள்ளுவதாக அமையாதா?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து மாறுபட்டதாகவே ஆரம்ப காலங்களிலிருந்து காணப்பட்டு வந்துள்ளது. எனிலும் பல்கலைக்கழக நிர்வாக சட்டங்கள் என்பது அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானது. அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த தடை என்பது சட்டபூர்வமான என்பதற்கு அப்பால் அரச நிறுவனத்தில் இவ்வாறானதொரு நினைவேந்தல் செய்ய முடியாதென்பது இலங்கையின் இயல்பான சட்டமாகும். எனிலும் இவ்விடயங்கள் மாணவர்களின் உரிமைகளை பறிக்கப் போவதில்லை மாணவர்கள் காலாதி காலமாக தடைகளின் உள்ளேயே தம் உரிமைகளை அனுபவித்து வந்துள்ளார்கள். அது தொடரும்

கேள்வி – யாழ்ப்பாணத்தில் மாவீரர்கட்கான கல்வெட்டுக்களை பல நாள் முன்னேற்பாடுகளூடாக செய்து விளம்பர நினைவு கூரலை ஒரு தரப்பினர் இம்முறை செய்ய, பல்கலைக்கழக மாணவர்கள் வருடந்தோறும் உணர்வெழுச்சசியுடன் வணக்கம் செலுத்தும் நடவடிக்கையை தடுக்க முனைந்தமை அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நகர்த்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை என சிலர் கருதுகிறார்கள், இதுபற்றி மாணவர்கள் என்னகருத்தினை பகிர்ந்து கொண்டார்கள்?

இதைப்பற்றி மாணவர்கள் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு கட்சிகளும் ஏனைய கட்சிகள் மீது பழி கூறுவது இயல்பான நிகழ்வாக மாணவர்கள் கருதுகின்றனர்.

கேள்வி – இவ்வாறான நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சியான சமூக தலைமைத்துவ முன்னெடுப்பதனை தடுக்கும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் மேலும் வலுவாக சமூகத்திற்கு தன்னெழுச்சியாக தொடர்ந்து பணியாற்றா வழி ஏற்படுத்தி தருகின்றது.

கேள்வி – கடந்த இரண்டு மாதங்களின் முன்னர்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை அதன் பின்னர் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னின்றமை , நவம்பர் 26ம் திகதி தடை உத்தரவு, ஒன்றிய தலைமைகள்  முனைப்புடன் பங்குபற்ற முடியாமை  என்பனவற்றை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

தடைகளும்  எதிர்ப்புகளும்  வருகையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் சமூகத்துக்கான பணியினை செவ்வனவே செய்துவருகின்றது என்ற செய்தியை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதாக அமைகின்றது. ஆக எதிர்வரும் ஒன்றியங்களும் மாணவர்களும் தொடர்ந்தும் தமிழ் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் பொறுப்புகள் பற்றி தெளிவினை பெற்றுள்ளனர்.

கேள்வி – இன்றைய சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவ்வாறு தம் சமூக முற்போக்கு மாதிரி தலைமை பண்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இன்று அரசியல் கட்சிகளில் ஓர் ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் பொது அமைப்புக்கள் என்ற ரீதியிலும் வலுவான ஒரு கட்டமைப்பு இல்லாத சூழலில் ஓர் பெருந்திரளாக காணப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிச்சயமாக தமிழ் சமூகத்திற்கு இன்று உள்ள ஓர் ஆறுதல் ஆகும். அதனை உணர்ந்து மாணவர் ஒன்றியம் தமிழ் சமூகத்திற்கு தேவையான அரசியல் சமூகரீதியான  செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முன்வரவேண்டும்.