தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – மனித உரிமை ஆணைக்குழு கடிதம்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் உரிய முன்னுரிமை பட்டியல்  பொருத்தமான நடை முறைக்கு சாத்தியமான செயற் திட்டம் ஒன்றினை உடனடியாக தயார் செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, ஆணைக் குழுவின் தலைவர் ஜகத் பாலசூரியவின்  கையெழுத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு கடிதம் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக எனும் தலைப்பின் கீழ் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், பல அமைப்புக்கள் தற்பேதைய தடுப்பூசி வழங்கும் முறைமை தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதனால் குறித்த முறைப்பாட்டினை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அவ்வாறான நிலையில்  வரும் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்துதல் குறித்த முன்னுரிமை பட்டியல் தொடர்பிலான தகவல்களை அறியத் தருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்ட திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அனுப்பப்படும்  கடிதம் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.