தகனம் செய்வது என்ற முடிவில் எந்த மாற்றமும் கிடையாது – அரசாங்கம் உறுதி

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதன் வழியாக கொரோனா தொற்றுப் பரவுகின்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு கட்டாயமாகத் தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ள நிலையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் அளித்த முறையை அரசாங்கம் பின்பற்றுகிறது என்றும் நாட்டில் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய முறையிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் தன்னிச்சையாகத் தங்களால் முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.