ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக இந்திய அரசு நோட்டீஸ்

லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதியை, ஜம்மு காஷ்மீருடன் இருப்பதாக காட்டிய ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்  ட்விட்டர் நிறுவனம், இந்த பிரச்சினையை தீர்க்க நவம்பர் இறுதி வரை நேரம் கேட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 9 ஆம் திகதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் துணைத் தலைவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் “இந்திய அரசு லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்து ‘லே’  வை அதன் தலைநகரமாக அறிவித்திருக்கும் போது, ‘லே’ வை ஜம்மு காஷ்மீரில் உள்ள பகுதியாக  காட்டுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக  ட்விட்டர் செய்யும் திட்டமிட்ட சதி. ட்விட்டர் நிறுவனம் தவறான வரைபடத்தைக் காண்பித்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதித்துள்ளது.” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் கடிதத்திற்கு முறையாக பதிலளித்துள்ளோம், எங்கள் கடிதத்தின் ஒரு பகுதியாக, இந்த குழப்பத்திற்கு காரணமாக இருந்த புவி-குறிச்சொல் தொடர்பாக இருந்த பிரச்சனையை சரி செய்து, சில முன்னேற்றங்களுடன் புதிய புவி-குறிச்சொல்லை அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதற்கு முன்னதாகவும் லேவை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியுள்ளது. அப்போதும் இந்திய அரசு  தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.