Tamil News
Home உலகச் செய்திகள் டெல்லியில் கூடார நகரம் அமைத்த விவசாயிகள்

டெல்லியில் கூடார நகரம் அமைத்த விவசாயிகள்

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூடார நகர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மழை ஆகியவற்றில் இருந்து தம்மை காத்துக்கொள்ள இந்த கூடார நகரை உருவாக்கியதாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 22-வது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க டெல்லி சென்று கொண்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்து ஒரு எரிபொருள் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட கூடாரங்களைக் கொண்ட ஒரு கூடார நகரை உருவாக்கியுள்ளனர். இந்த கூடாரங்களில் 500 பேர் வரையில் தங்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மாலை 6 மணிக்கு கூடாரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்த நேரத்திலும் கூடாரங்களை எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்  இணைந்து தமது ஆதரவையும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

Exit mobile version