Tamil News
Home செய்திகள் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – ஜெ. கோசுமணி

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – ஜெ. கோசுமணி

இலங்கையின் குறிப்பாக வடபகுதி கடற் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குவதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல்களால் 500 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழக தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி கூட இன்னும் கிட்டவில்லை. 

இந்த நிலையில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிப்பது என சிறீலங்கா அரசின் ஆதரவு அமைப்பான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் இலங்கை கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ. கோசுமணி அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய கருத்தை இங்கு தருகின்றோம்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று தெரிவித்த கருத்து தற்போது வெளிவந்திருக்கிறது.

இந்தக் கருத்து மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். ஆனால் உண்மையில் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து  இலங்கையின் தமிழ் மீனவர்களும், இந்தியாவின் தமிழ் மீனவர்களும் மோதிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை எற்படுத்துவதாகத்தான்   நான் இதைப் பார்க்கிறேன்.

இலங்கையைப் பொறுத்தவரை தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்  பிடிக்க அனுமதி இல்லை.  1974இல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட  பின்பு 1974 இல் இருந்து 1983 வரை எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் தொன்று தொட்டு இரண்டு நாட்டு மீனவர்களும் இந்த கடல் பகுதியில் மீன் பிடித்து வந்தனர். 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சரத்து 5, 6 மிகத் தெளிவாக கச்சத்தீவு  பகுதியில் இருக்கக்கூடிய அந்தோனியார் கோயிலில் ஆலய வழிபாடு செய்யலாம். மீனவர்கள் ஓய்வு எடுக்கலாம். வலை உலர்த்தலாம். மீன் பிடிக்கலாம் என்கின்ற கருத்து மேற்கண்ட இரண்டு நாட்டு ஒப்பந்த அடிப்படையில் 5, 6 சரத்துக்கள் இருந்து வந்தன.

1976ஆம் ஆண்டு இரண்டு நாட்டு வெளிவிவகாரத்துறை செயலாளர்கள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மேற்கண்ட 5, 6  சத்துக்களில் இருந்த கருத்துக்களையெல்லாம் நீக்கி அதை இரத்து செய்துவிட்டனர் என்ற செய்தி எங்களுக்கு வந்தது. ஆனாலும்கூட 1983 ஆம் ஆண்டு வரை இருநாட்டு மீனவர்களுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் மேற்கண்ட கடற்பகுதியில் மீன் பிடித்து வந்தனர்.

1983இல் இலங்கையில் உள்நாட்டு கலவரம்  உருவாகிய பின்பு,  தமிழக மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை தாக்குவது, படகுகள் மற்றும்   மீனவர்களைச் சிறை பிடிப்பது, மீனவர்களை சுட்டுக் கொல்வது போன்ற உலக நாடுகள் செய்யாத மிகப்பெரிய கொடூரத்தை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகின்றது.

இதுவரை 800 இற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனமுற்று கை கால் இழந்து மனநிலை பாதிக்கப்பட்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இரண்டு நாட்டு மீனவர்களும் இலங்கையின் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்கின்ற செய்தி மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கின்றது. டக்ளஸ் தேவானந்தாவின் அறிவிப்பு சிறீலங்கா அரசின் அனுமதியோடு அளிக்கப்பட்ட அறிவிப்பா? என்பது தெரிய வில்லை. ஆனாலும் இரண்டு நாட்டு மீனவர்களும் இந்த பகுதியில் மீன் பிடிக்கலாம் என்பது வரவேற்புக்குரிய செய்தியாக இருந்தாலும், இதன் பின்புலத்தில் வேறு ஏதேனும் சதி இருக்குமோ என்று அச்சப்படத் தோன்றுகின்றது. தமிழக மீனவர்களை பொறுத்தவரை இரண்டு நாட்டு அரசும், இரண்டு நாட்டு மீனவர்களும் இணைந்து பேசி இதில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு நல்ல தீர்வை கொண்டு வருவது சாலச் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக இலங்கை மீனவர்களை பொறுத்தவரை தமிழக மீனவர்கள் வைத்திருக்கக்கூடிய இரட்டைமடி சுருக்குமடி வலைகளை வைத்து மீன் பிடிக்காமல், சாதாரணமாக கட்டு வலையை வைத்து மீன் பிடித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

Exit mobile version