ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ (Pulitzer)விருது

அமெரிக்கக் காவல் துறையால் கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம் பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ (Pulitzer Prize) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912ஆம் ஆண்டு முதல் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை மின்னிகியூ நகர காவல்துறை அதிகாரி கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது டார்னெல்லா பிரேஸர் (Darnella Frazier) தனது தொலைபேசியில் பதிவு செய்த காணொளி உலக அளவில் பேசு பொருளானது. இதையடுத்து டார்னெல்லா பிரேஸரை கௌரவப்படுத்தும் நோக்கில், அவருக்கு சிறப்பு ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்ஸர்’ குழுவின் 105 ஆவது ஆண்டு விருதுகள் ஆபிரிக்க அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மீதான கொடுமைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜோர்ஜ் புளொய்ட் கொலையுடன் தொடர்புடையவையாக அமைந்துள்ளன.

புளொய்டின் கொலைச் சம்பவத்தை முதலில் வெளியிட்ட மினியாபோலிஸ் நகர உள்ளூர் ஊடகமான ‘Minneapolis Star Tribune’ பத்திரிகைக்குச் சிறந்த ‘பிறேக்கிங் நியூஸிற்கான (breaking news) ‘புலிட்ஸர்’ விருது கிடைத்திருக்கிறது.