ஜே.விபி.யும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும்;மறைந்துள்ள வரலாறு -நேரு குணரட்னம்

சிலர் என்னிடம் கேட்டார்கள், கடந்தமுறை மகிந்தாவை அகற்ற போட்டியின்றி ஓரணியில் நின்று மைத்திரியின் வெற்றிக்கு வழிவிட்ட ஜே.வி.பி ஏன் இம்முறை தேர்தல் களத்தில் நிற்கிறது. இது சஜித் பிரேமதாசாவின் வெற்றி வாய்ப்பைத் தானே பாதிக்கும்? தற்போது தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், இக் கேள்வியின் பதிலுக்கு பின்னால் ஒரு வரலாறே புதைந்து கிடக்கிறது. இன்று அனைத்துவிடயங்களிலும் பழைய விடயங்கள் மறந்துவிட்ட தேடல்களே நிறைந்து கிடக்கின்றன.

அதுவும் குறிப்பாக தமிழ் அரசியலில் அவ்வாறே. முதல் வாக்கிலேயே பிறேமதாசா நிச்சயம் வெற்றி பெறுதவற்கான வாய்ப்பை ஜே.வி.பியின் களப்பிரவேசம் இல்லாதொழித்துவிட்டது எனலாம். இரண்டாவது வாக்குத் தான் ஈற்றில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை எழுந்தால் அது ஜே.வி.பியின் வாக்குகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. அங்கு தான் ஜே.வி.பி குறித்த இந்தக் கேள்விகள் எழுகின்றன.

சமீபத்திய தேர்தல்களில் ஜே.வி.பி எட்டிய உச்சம் 2018 ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளுராச்சி தேர்தல்களில் ஏற்ப்பட்டது. அத்தேர்தல்களில் ஜே.வி.பி 7 இலட்சத்து 10 ஆயிரத்து 972 வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில் இவ்சனாதிபதித் தேர்தலில் அது குறைந்பட்சம் 5 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட வாக்குகளைப் பெறும். அது ஈற்றில் பெறும் எண்ணிக்கை கோத்தபாயாவை விட சஜித் பிறேமதாசாவையே அதிகம் பாதிக்கும். சரி கேள்வியின் பதிலுக்கு வருவோம்.

ஜே.வி.பியின் முதல் ஆயுதக் கிளர்ச்சி 1971இல் நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்தவர் சுதந்திரக்கட்சியின் சிறீமாவோ பண்டாரநாயக்கா. அவர் இந்திய ராணுவ உதவியை நாடி ஈற்றில் இராணுவவலு கொண்டு அதை அடக்கினார். அதில் பல இளைஞர்கள் அப்பாவிகள் உட்பட கொடூரமாக கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் இருக்கிறது.

அதில் கைதான ஜே.வி.பி தலைவர்கள் ஜ.தே.க ஆட்சிக்காலத்தில் விடுதலையாகி தம்மை அரசியலிலும் கட்சியாக மாற்றி தேர்தல் களத்திலும் குதித்தனர். 1982இ ஒக்டோபர் 20ஆம் நாள் நடைபெற்ற முதலாவது சனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் தலைவர் றோகன விஜயவீராவே போட்டிக் களத்தில் குதித்தார்.

அவ் 1982 சனாதிபதித் தேர்தலிலேயே குமார் பொன்னம்பலம், கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் வாசுதேவ நாணயக்காரா ஆகியோரும் களத்தில் குதித்தனர். றோகன விஜயவீரா 2 இலட்சத்து 73 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் வந்தார். இத்தேர்தல் தான் கடந்த 2015 தேர்தலை விட அதிக வாக்களிப்பைக் கண்ட சனாதிபதித் தேர்தலாகும். அதில் 81.06 சதவீத வாக்களிப்பு இருந்தது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 4.19 சதவீத வாக்குகளை வேறு விஜயவீரா பெற்றிருந்தார்.

இந்நிலையில் தான் 1982 தேர்தல் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே, தமிழருக்கு எதிரான 1983 யூலைக் கலவரம் வெடித்து தமிழர் வாழ்வையே புரட்டிப் போட்ட வரலாற்றுச் சம்பவம் நடந்தேறியது. இதை முன்னின்று நடாத்திய ஜே.ஆர் தலைமையிலான ஜ.தே.க தலைவர்கள், சர்வதேச அழுத்தம் குறிப்பாக இந்திய அழுத்தம் அதிகரிக்க, யாரோ இவ்வாறு இனக்கலவரத்தைத் தூண்டி, தமக்கு எதிராக சதி செய்வதாக கதையளக்க ஆரம்பித்தனர்.

ஏற்கனவே ஜே.வி.பியின் வளர்ச்சி தான் கொண்டுவந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுதவற்கான 50 சதவீத வாக்கைப் பெறும் நிலையை எதிர்காலத்தில் இல்லாது செய்துவிடும் என்ற கடுப்பில் இருந்த ஜே.ஆர், தமது பரப்புரைக்கு வலுச்சேர்க்கும் வகையில், 83 யூலைக் கலவரத்திற்கு பின்னால சதி செய்தவர்கள் ஜே.வி.பி என பகிரங்கமாக அறிவித்து, அதனை தடைசெய்வதாகவும் அறிவித்தார். அது ஜே.வி.பி தலைவர்கள் மீண்டும் தலைமறைவாகவும், மறைந்து மீண்டும் போராடவும் வழிகோலியது.

அவ்வாறான போராட்டம் 1987இல் தீவிரமடைய ஆரம்பித்தது. 1987 ஏப்ரல் 15ஆம் நாள் கண்டி பேலியகலவில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீதான தாக்குதலுடன் அது ஆயுத மோதலாக வலுப்பெற்றது. இக்காலப் பகுதியில் தான் இந்திய இராணுவப் பிரசன்னமும் வடமராச்சி ஆக்கிரப்பை மையப்படுத்தி அமைந்தது. இதனை தன் போராட்டத்திற்கான வலுநிலையாக ஜே.வி.பி மாற்றிக் கொண்டது.

இந்நிலையில் தான் தீவிரமடையும் ஜே.வி.பி போராட்டத்திற்கு மத்தியில் 1988 சனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 19ஆம் நாள் நடைபெற்ற அத்தேர்தலில் தான் ரணசிங்க பிறேமதாசா தேர்தளத்தில் சனாதிபதியாக போட்டியிட்டார். எதிர்த்து சிறீமாவோ பண்டாரநாயக்காவும், 1984இல் விஜய குமாரத்துங்கவால் (சந்திரிக்காவின் கணவர்) ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா மக்கள் கட்சி சார்பில், ஒஸ்வின் அபயகுணசேகராவும் போட்டியிட்டனர். இத்தேர்தலே சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதி குறைந்த 55.32 சதவீத வாக்களிப்பைக் கண்டது.

ஜே.வி.பி அரச மோதலில் அதிகம் பாதிக்கப்பட்ட சிங்கள மாவட்டங்களில் எட்டப்பட்ட வாக்களிப்பு வீதமே அன்றைய நிலையை புடம் போட்டுக்காட்டும். மாத்தளையில் 30.28 சதவீத வாக்களிப்பும், மாத்தறையில் 23.84 சதவீதமும், கம்பாந்தோட்டையில் 29.43 சதவீதமும், அநுராதபுரத்தில் 40.36 சதவீதமும், பொலநறுவையில் 29.73 சதவீதமும், பதுளையில் 41.8 சதவீதமும், மொனராகலயில் 17.01 சதவீத வாக்களிப்புமே எட்டப்பட்டன. இதே மாவட்டங்களில் 1982 சனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கு மேற்ப்பட்ட வாக்களிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வருடம் யாழ்ப்பாணத்தில் 21.72 சதவீதமும், வன்னியில் 13.79 சதவீத வாக்குகளே பதிவாகின. இதில் ஒஸ்வின் அபயகுணசேகர அதிக வாக்குகளை பிறேமதாசாவை கடந்து பெற்ற மாவட்டம் யாழ்ப்பாணம் என்பதுவும், இரண்டாவது அதிக வாக்குகளை பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிறேமதாசா சனாதிபதியாக பதவியேற்ற பின் ஜே.வி.பி மீதான இராணுவ நடவடிக்கை தீவிரமடைய, மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், பல மனிதப்புதைகுழிகள் சிங்களப் பகுதிகளில் அமைந்ததாகவும், ஆன குற்றச்சாட்டுகள் இன்றுவரை எதிரொலித்த வண்ணமே உள்ளன. 1989 இன் பிற்பகுதியில் நவம்பர் 13ஆம் நாள் மறைவிடத்தில், வைத்து சுற்றிவளைக்கப்பட்டார், ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீரா. பொலிஸ் காவிலில் இறந்துவிட்டார் என பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு பிறேமதாசாவின் கட்டளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை உண்டு.

இவ்வாறான பின்னணி கொண்ட ஜே.வி.பி எவ்வாறு சஜித் பிறேமதாசாவை வெளிப்படையாக ஆதரிக்கமுடியும் என்பதே கேள்வி. ஆகவே எழுப்பப்பட்ட கேள்வியின் பின் அதற்கான பதில் வரலாறாக புதைந்துகிடக்கிறது. அதனால் வெளிப்படையாக சஜித்திற்கு இரண்டாவது வாக்கை அளியுங்கள் என்பதைக் கூட சொல்லமுடியாத நிலையிலேயே ஜே.வி.பி உள்ளது. இம்முறை சனாதிபதித் தேர்தலில் உள்ள பல இடியப்பச் சிக்கலில் இதுவும் ஒன்று. ஆனால் அதிகம் யாராலும் பேசப்படாத விடயம். இன்னொரு விதத்தில் கூறுவதானால் சஜித் பிரேமதாசா எதிர்கொள்ளும் சவால்களில் இது முக்கியமானது என்பது மட்டும் உண்மை.