ஜெலட்டின் டியூப் (capsule) மூலம் நெல் விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி

விவசாயம் என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டு மிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட முக்கியமான வளர்ச்சியாகும். உணவு உபரிகளை உருவாக்கிக் கொள்வதானது, அடர்த்தியான மக்கள் தொகை அடுக்குக் கொண்ட சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது.

விவசாயத்தின் வளர்ச்சி 10,000கி.மு. ஆண்டுகள் என்பதால், நிலப்பரப்பிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பல புதிய நெல் ரகங்கள் அறிமுகமாகியுள்ள போதும், நாற்று நட்டு பயிரிடும் முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையிலிருந்து சற்றே வித்தியாசமான முறையில் நெல் சாகுபடி செய்வதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஓ.வி.சி. அரசு உதவி பெறும் பள்ளியின் உயிரியல் ஆசிரியர் அருள் வினோத்குமார் ஜெலட்டின் டியூப்களில் (capsule) நெல் விவசாயம் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்புதிய முறை நெல் விவசாயம் பற்றி வினோத்குமார் பின்வருமாறு விளக்கமளிக்கிறார். “இந்த ஜெலட்டின் டியூப்கள் புரதப் பொருளினால் ஆனதால், மண்ணுக்கோ, மனிதனுக்கோ பாதிப்பில்லை. நெல் தூவும் போது ஏக்கருக்கு 25 கிலோ நெல் தேவைப்படுகிறது. ஜெலட்டின் டியூப்களில் பயிரிடும் முறையில் மூன்று கிலோ விதை நெல் போதுமானது. 10 லீற்றர் அசோஸ்பைரில்லத்தை 100 லீற்றர் தண்ணீரில் கலந்து அதில் விதை நெல்லை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும். வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் 3 நெல்லை டியுப்பில் அடைக்க வேண்டும்.

வயலிலும் நீர்தேங்கியிருக்க வேண்டியதில்லை. ஜெலட்டின் டியூப் மண்ணில் செல்லும் அளவு ஈரப்பதம் இருந்தால் போதும். மூன்று நாட்களில் ஜெலட்டின் டியூப் கரைந்து விதை நெல் முளைக்க ஆரம்பிக்கும். நெல்லைப் பயிரிடும் முன்பாக சணப்பு, தக்கைப் பூண்டு, அகத்தி என பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். இந்த முறையில் செய்தால், மண்ணில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து நிறைந்து மண் வளமாக இருக்கும்.

நுண்ணூட்டம் பெற்ற நெல்லை நடும் போது, 25 நாட்களில் பயிருக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்து விடும். 25 cm இடைவெளியில் டியூப்பில் நெல்லை நடும் போது அதிக காற்றோட்டம் கிடைக்கிறது. அதேபோல களைகளும் குறையும். அதிகபட்சமாக 80 தூர் வரை பிடித்து கதிர்கள் நிறையக் கிடைக்கும். வழக்கமாக ஏக்கருக்கு 45 மூடை நெல் விளையும் என்றால், டியூப் முறையில் 60 மூடை நெல் உற்பத்தி கிடைக்கும்” என அவர் விளக்கம் தருகின்றார்.

PHOTO 2021 01 13 14 28 07 ஜெலட்டின் டியூப் (capsule) மூலம் நெல் விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி

அதேபோல ஜெலட்டின் டியூப்பில் வெங்கடேஸ்வரன் என்பவர் நெற் சாகுபடி செய்து வருகிறார். இது பற்றி வெங்கடேஸ்வரன் குறிப்பிடும் பொழுது, “டியூப்பில் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டைத் தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவை நிரப்பப்படுகின்றன.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் ஜெலட்டின் டியூப் வீதம் தேவைப்படும் என்கிறார் வெங்கடேஸ்வரன். இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர்ப் பூச்சி போன்ற நோய்கள் பயிரைத் தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி செய்யும் போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை எனவும் கூறுகிறார்.

அதேபோல இம்முறையின் மூலம் பயிர் செய்யும் போது 90 நாட்களில் இருந்து 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம் என்கிறார். மேலும் நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். ஜெலட்டின் டியூப் முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும்” எனவும் தெரிவிக்கின்றார்.

இந்த ஜெலட்டின் டியூப் முறை சாகுபடியை எள், கத்தரி, தக்காளி போன்ற சிறிய விதைகளுக்குக்கூடப் பயன்படுத்தலாம். இதற்கான தேவை அதிகரிக்கும் போது விதை ஜெலட்டின் டியூப் தயாரிக்கும் இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்து பயன்படுது்தினால் சில மணி நேரங்களில் இலட்சக் கணக்கான ஜெலட்டின் டியூப் விதைகளை தயார் செய்து விடலாம். மேலும் நாற்று நடும் இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்த முடியும்.

PHOTO 2021 01 13 14 28 09 ஜெலட்டின் டியூப் (capsule) மூலம் நெல் விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை நாடுகின்ற நாம், ஏன் விவசாயத்தில் மட்டும் புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றோம்?  மனிதனின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு பொருளானாலும், விளம்பரத்தின் மூலம் அந்த புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றார்கள். அதனால் மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்குத் தேவையான புதிய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அதுவே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்படும் உரங்கள், விவசாய உபகரணங்கள், விவசாய முறைகள் எனில் பல எதிர்பார்ப்புகள் வருகின்றன.

இருந்தும்கூட ஆரம்பகால விவசாய முறை போல இன்றில்லை. ஒவ்வொரு விதத்திலும் அதாவது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் என பல்வேறு வழிகளில் மாற்றமும், முன்னேற்றமும் அடைந்து வந்துள்ளது.

எனவே விவசாய முறையில் மாற்றம் என அறிந்த உடனேயே அது எமது உடலிற்குத் தீங்கையே விளைவிக்கப் போகின்றது எனக் கருதாது, புதிய முறைகளை வரவேற்று, உழவர்களுக்கு நாமும் நவீனமுறை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் பயனடைவோம்.

மதுஜா வரன்

கலைப்பீடம்

யாழ். பல்கலைக்கழகம்