Tamil News
Home செய்திகள் ஜெய்சங்கர் – சம்பந்தன் நாளை முக்கிய சந்திப்பு – கோட்டா, மஹிந்த, தினேஷுடன் இன்று பேச்சு

ஜெய்சங்கர் – சம்பந்தன் நாளை முக்கிய சந்திப்பு – கோட்டா, மஹிந்த, தினேஷுடன் இன்று பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், நேற்றுப் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் நாளை வரை கொழும்பில் தங்கியிருந்து பல்வேறுமட்ட பேச்சுகளை நடத்தவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை இன்று ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.

இந்தநிலையில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இவர் நாளை பேச்சு நடத்தவுள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவையும் ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.

மேலும், பல பிரமுகர்கள், வணிகத்தலைவர்கள் ஆகியோரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பதுடன் இந்த ஆண்டின் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கரின் இலங்கைக்கான இந்தப் பயணத்தில் ஜெனிவா விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என இலங்கை – இந்திய அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version