Tamil News
Home செய்திகள் ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகின்றது: உத்தியோகபுர்வமாக அறிவித்தார் மஹிந்த

ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகின்றது: உத்தியோகபுர்வமாக அறிவித்தார் மஹிந்த

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version