ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சு; அடுத்த வாரமும் தொடரும் – சுமந்திரன்

ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லாத போதிலும், அதில் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு நாடாக இருப்பதால், அமெரிக்காவுடனும் பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கை தொடர்பில் பிரதான அனுசரணை நாடுகள் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப்போகின்றன என்பதையிட்டு குறிப்பிட்ட தூதுவர்கள் தமது நாட்டு அரசாங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.

பெரும்பாலும் அடுத்த வாரம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்த்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அனுசரணை நாடுகளின் கருத்துக்களை அறிந்த பின்னரே இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு தீர்மானிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் முடிவுக்கு வருவதால், மற்றொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதா அல்லது இதனை வேறு வகையில் கையாள்வதா என்பதையிட்டு, பிரதான அனுசரணை நாடுகள் ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அனுசரணை நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

இதேவேளையில், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அரசாங்கம் அதற்கான யோசனைகளைக் கோரியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது யோசனைகளை முன்வைக்க இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் தமது அரசியலமைப்பு யோசனைகள் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு முன்னர் கோரப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.