ஜெனீவாவை சமாளிக்க துருப்புச் சீட்டாகும் கிழக்கு முனையம் – அகிலன்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதென அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் முடிவெடுத்தமைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜெனீவாவில் உருவாகியிருக்கும் நிலைமைதான் இதற்கு உடனடிக் காரணம். ஜெனீவாவில் நெருக்கடி ஒன்று உருவாகும் என்பதை இலங்கை அரசாங்கம் கணித்திருந்த போதிலும், அது இந்தளவுக்கு மோசமானதாக வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அதில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை அரசின் பதிலுக்காக அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் உள்ளடக்கம்தான் கொழும்பில் இப்போது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவாவுக்கு அஞ்சப்போவதில்லை என ஆளும் தரப்பினர் வீராவேசமாகப் பேசினாலும்,  ஆளும் கட்சிக்குள்ளேயே ஜெனீவா விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அரச தலைமை இப்பிரச்சினையைக் கையாண்ட முறை குறித்து அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக – இராணுவ அணுகுமுறையிலேயே இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது. வெளிவிவகாரச் செயலாளராகவுள்ள அட்மிரல் ஜயநாத் கொலம்பகேதான் இலங்கை அரசின் சார்பில் தற்போது ஜெனீவா விவகாரங்களைப் பெருமளவுக்குக் கையாள்வதாகத் தெரிகின்றது. அவர்தான் அது தொடர்பில் அன்றாடம் அறிக்கைகளை வெளியிட்டும் வருகின்றார். கடற்படையின் முன்னாள் தளபதியான அவர் மீதும் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

படையினரைப் பயன்படுத்தியே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. 25 மாவட்டங்களுக்குமான கோவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாகவும் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் கொரோனாவுக்கு எதிரான அசின் நடவடிக்கைகள் வெற்றி பெற்றது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருக்கின்றது. அரசாங்கம் அதனைக் கையாண்ட முறையிலுள்ள தவறுதான் அவற்றுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

அதேபோல, ஜெனீவாவைக் கையாள்வதற்கு அரசாங்கம் களமிறக்கியுள்ளவர்கள், முன்னாள் படையினராகவே உள்ளனர். இது தொடர்பில் ஆளும் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் உருவாகத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. சர்வதேச விவகாரங்களைக் கையாண்ட அனுபவம் உள்ள எவரும் கொழும்புத் தரப்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விவகாரத்தில் முடிவு எடுத்து, விடயங்களை முன்னெடுக்கும் செயல்பாட்டில் சம்பந்தப்படவேயில்லை என்று ஆளும் கட்சித் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச, முன்னாளில் ஐ.நா.விடயங்களில் சம்பந்தப்பட்ட மஹிந்த சமரசிங்க, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் என்று விடயமறிந்த எல்லோரும் ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற போதிலும், அவர்கள் இவ்விடயத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பதாகவே சொல்லப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விடயங்களை அரசு கையாள்வது தொடர்பில் ஊடகங்களில் வருவதைத்தான் செய்தியாக அறியும் நிலையில் அவர்கள் இருப்பதாகவும் தகவல் உள்ளது.

அனுபவம் இல்லாதவர்கள் இந்த விவகாரத்தைக் கையாள்வதால்தான் ஜெனிவாவில் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்திக்கப் போகின்றது என்று அரசின் மூத்த தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். கோட்டாபய ராஜபக்‌சவை ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பைச் செய்த ‘வியத்மக’ அமைப்பினர்தான் ஜெனீவா விவகாரத்தை இப்போது கையாள்வதில் முன்னிற்கின்றார்கள். அவர்கள்தான் ஜனாதிபதியை வழிநடத்துபவர்களாகவும் உள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஜெனீவாவுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை எனக் கூறிக்கொண்டிருந்தாலும்கூட, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அனுப்பிவைத்துள்ள அறிக்கை அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இலங்கை பதிலைத் தயாரிப்பதற்கு வசதியாக இந்த அறிக்கை முன்கூட்டியே கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தாலும், பதிலளிப்பதில் இலங்கை தடுமாறியது. குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கையால் பதிலளிக்க முடியவில்லை. மேடைகளில் பேசுவதைப் போல ஐ.நா.வுக்கு பதிலளிப்பது இலகுவானதல்ல என்பதுதான் இதன் கருத்து.

பிரச்சினை ஜெனீவாவிலேயே இருக்குமானால் அதனைச் சமாளிப்பது இலகுவானது என்ற கருத்து இலங்கை அரசுக்குள்ளது. கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளும் இராஜதந்திரத்தில்தான் கொழும்பு நம்பிக்கை வைத்திருக்கின்றது. கடந்த வருடங்களிலும் அதனைத்தான் செய்வது. அதனைவிட, இலங்கையின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும், மனித உரிமைகள் பேரவையால் செயற்படுத்த முடியாது. அதனால்தான், அரசாங்கம் நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தெளிவாக ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவரது பரிந்துரை. இது வெறுமனே பரிந்துரைதான். இதனை நிறைவேற்றுவதாயின், மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகுமா என்பது முக்கியமான கேள்விதான். ஆனால், மேற்கு நாடுகள் பலவும் இவ்விடயத்தில் இலங்கைக்கு எதிராக அணிவகுத்து நிற்பது கோட்டாபய அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காகத்தான் மற்றொரு ஆணைக்குழுவை ஜனாதிபதி அவசரமாக அமைத்திருக்கின்றார். ஆனால், இந்த ஆணைக்குழுவைக் காட்டி நிலைமைகளைச் சமாளித்துவிட முடியாது. அதனை மனித உரிமைகள் அமைப்புக்களும், மேற்கு நாடுகளும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுடன் ஜெனீவாவைச் சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இலங்கை அரசுக்கு முதலில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது காணாமல்போயுள்ளது. காரணம் மேற்கு நாடுகள் கடுமையாக இருப்பதுதான்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தினால், இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் இலங்கை மீது சீற்றமாக இருக்கின்றது. சீனாவின் ஆதிக்கத்தை ஓரளவுக்காவது சமப்படுத்துவதற்கு கிழக்கு முனையத்தைப் பெற்றுக்கொண்டேயாக வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதற்கான நகர்வுகளின் ஒரு கட்டம்தான் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இன்றுள்ள ஒரே துருப்புச் சிட்டு ஜெனீவாதான். கிழக்கு முனையம் இந்தியாவிடம் கொடுக்கப்படுவதே பொருத்தமானது என அமெரிக்காவும் கூறிவிட்டது.

download ஜெனீவாவை சமாளிக்க துருப்புச் சீட்டாகும் கிழக்கு முனையம் -	அகிலன்

இந்தப் பின்னணியில்தான் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். நாளை திங்கட்கிழமை இவ்விவகாரம் அமைச்சரவையில் ஆராயப்படலாம் எனத் தெரிகின்றது. “49 வீதமான பங்குகளை மட்டுமே இந்தியாவின் அதானி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பொகின்றோம். மிகுதி 51 வீதமான பங்குகள் இலங்கை துறைமுக அதிகார சபையிடமே இருக்கும்” எனக் கூறி சிங்கள தேசியவாதிகளை சமாளித்துவிட முடியும்” என்ற நம்பிக்கையுடனேயே கோட்டா அரசு இப்போது காய் நகர்த்துகின்றது.

கிழக்கு முனையத்தை துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி ஜெனீவாவை இலங்கையால் சமாளித்துவிட முடியுமா?