ஜெனிவாவில் நடுநிலை வகித்த இந்தியா அறிவித்தது என்ன? பிரதிநிதியின் உரை

மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்துதல் மற்றும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வலியுறுத்தியுள்ள இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொருத்தமான தீர்மானங்களிற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை குறித்த தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக இந்திய பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

“நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் நிவாரணம் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளிற்கு இந்தியா பங்களிப்பு செய்துள்ளது. எங்கள் அபிவிருத்தி உதவிகள்இ வாழ்வாதாரத்தை மீள ஏற்படுத்துதல் பொருளாதார மீள் எழுச்சி குறித்து கவனம் செலுத்துபவையாக காணப்ட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில்.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படை விடயங்களால் வழிநடத்தப்படுகின்றது. ஒன்று சமத்துவம் நீதி கௌரவம் சமாதானம் ஆகியவற்றிற்கு தமிழர்களிற்கான எங்கள் ஆதரவு. இரண்டாவது இலங்கையின் ஐக்கியம் ஸ்திரதன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடடினை உறுதி செய்வது.

இரண்டு இலக்குகளும் ஒன்றுடன் ஒன்றிற்கு ஆதரவானவை இரண்டு நோக்கங்களையும் பரஸ்பரம் நிறைவேற்றுவதிலேயே இலங்கையின் முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும்.

மாகாணசபைக்கான தேர்தல்களை விரைவில் நடத்துதல் மற்றும் இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தத்திற்கு ஏற்ப அனைத்து மாகாணசபைகளும் வலுவான விதத்தில் செயற்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்புகளை இலங்கைநிறை வேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களிற்கு இந்தியா ஆதரவளிக்கின்றது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொருத்தமான தீர்மானங்களிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தினை நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கு தீர்வை காணுமாறும் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை சுதந்திரமும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டிருக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.