Tamil News
Home செய்திகள் ஜூன் இறுதியில் தனது முடிவை ஜனாதிபதி ரணில் அறிவிப்பாா் – பசிலுடனான சந்திப்பில் தெரிவிப்பு

ஜூன் இறுதியில் தனது முடிவை ஜனாதிபதி ரணில் அறிவிப்பாா் – பசிலுடனான சந்திப்பில் தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூன் இறுதியில் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம் பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன,
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மே தினத்தை அடுத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கூறினார்.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் அது தொடர்பில் சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இதன்போது கூறினார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தமது தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version