Home செய்திகள் ஜனாதிபதி தேர்தலில் யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முக்கியமாகும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தலில் யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முக்கியமாகும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

கோத்தபாயவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறினால் கூட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

பெரியபோரதீவு மற்றும் பட்டாபுரம் ஆகிய பகுதிகளில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் குறித்த வீதிகளின் புனரமைப்புக்கு சுமார் 45 இலட்சம் ரூபா கம்பிரலிய திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

Srinesan ஜனாதிபதி தேர்தலில் யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முக்கியமாகும் - தமிழ் தேசிய கூட்டமைப்புபோரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சுஜிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த பகுதி மாணவர்களின் நலன்கருதி பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பெறப்பட்ட பாண்ட் வாத்திய கருவி தொகுதிகளும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி எமது கட்சியின் ஆலோசனைகளைப்பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அவரின் போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகள் 217 பேர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். தற்போது 87கைதிகள் சிறையில் உள்ளனர் என்றால் 130 அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலைக்குரிய ஜனநாயக சூழலை ஏற்படுத்திக்கொடுத்த பங்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது.

இதேபோன்று ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கலந்துரையாடல்கள் மூலம் விடுத்திருக்கின்றோம். கம்பிரலிய திட்டம் பாரிய அபிவிருத்தி திட்டமாக இல்லாவிட்டாலும் எங்களது கோரிக்கைகளுக்கு அமைவாக சுமார் எனது திட்டங்களுக்காக 850 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

நாங்கள் தற்போது வழங்கும் ஆதரவினை தளர்த்திவிட்டால் அங்கிருந்துவருவபவர்கள் இவற்றினை செய்யமாட்டார்கள்.இருப்பதையும் பிடுங்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.

இலங்கையில் இருக்கின்ற தலைவர்களை ஒப்பிடுகின்றபோது எவரும் உயர்ந்த நிலையில் இல்லாதபோதிலும் உள்ளவற்றில் எங்களுக்கு ஓரளவு நல்லதுசெய்யக்கூடியவர்யார்,எந்தக்கட்சி செய்கின்றது என்பதை அடையாளம் கண்டு அவற்றிற்கு நாங்கள்ஆதரவு வழங்களாமே தவிர அது நிரந்தரமான உதவியாக இருக்கமுடியாது.

நாங்கள் எல்லோரையும் தூக்கியெறிந்துவிட்டுச்சென்றால் எதனையும் செய்யவில்லையென மக்கள் எம்மை குற்றஞ்சாட்டுவார்கள்.நாங்கள் ஆதரவு வழங்கியதன் அடிப்படையிலேயே இன்று சில அபிவிருத்திகள் கிடைத்துள்ளன.

கடந்த காலங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு தரகு வழங்கவேண்டிய நிலை காணப்பட்டது.நாங்கள் எந்த தரகும் வாங்குவதில்லை.நாங்கள் கொண்டுவரும் நிதி அவ்வாறே அபிவிருதிக்கு செல்கின்றது.

நாங்கள் இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கவில்லை.மோசமான ஒரு ஆட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக மக்களுக்கு சுதந்திரமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்காக இந்த ஆதரவினை கொடுக்கின்றோம். இதனைவிட சிறப்பான ஒரு ஆட்சியை மற்றவர்கள் தருவார்கள் என்று சொன்னால் நாங்கள் வழங்கும் ஆதரவினை விலக்கிக்கொள்கின்றோம்.அதன் பின்னர்
கடத்தல் நடந்தால்,காணாமல்ஆக்கப்பட்டது நடந்தால்,பழிவாங்கல் நடந்தால் நாங்கள் பொறுப்புக்கூறமுடியாது.ஐக்கிய தேசிய கட்சி வீழ்த்தப்படும்போது வரும் ஆட்சி சிறப்பான,துய்மையான ஆட்சியாக இருக்குமானால் நீங்கள் சொல்வது போன்று எங்களது முட்டுகளை, ஆதரவுகளை விலக்கிக்கொள்ள தயாராகயிருக்கின்றோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான மணி அடித்துவிட்டது.தற்போது இரண்டு வேட்பாளர்கள் களத்தில் குதித்திருக்கின்றார்கள். ஒருவர் கோத்தபாய ராஜபக்ச. கோட்டா தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த தோட்டா என்று சொல்லலாம். இரண்டாமவர் அநுரகுமார திசாநாயக்க. ஐக்கிய தேசியக் கட்சியில் கேள்விக்குறியொன்று விழுந்துள்ளது. இந்த
மூன்று வேட்பாளர்களையும் மதிப்பீடு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முதன்முதலாக இறக்கப்பட்டிருக்கின்றார். இவருக்கு நாங்கள் வாக்களிக்கலாமா என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இவர் எங்களுக்கு என்ன தீர்வை தரப்போகின்றார், கடந்த காலத்தில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.அவருக்கு நாங்கள் வாக்களிக்கலாம் எனச் சொன்னால் அதில் வடிகட்டிய சுயநலவாதத்தையும் முட்டாள்தனத்தையும் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

1990ஆம் ஆண்டிற்குப் பிறகு யுத்த காலத்தில் இங்கிருந்து மறைந்து இந்நதியா சென்று எந்த இழப்புமின்றி இங்கு வந்த வரதராஜப்பெருமாள் அவர்கள் இப்போது புதியதொரு அரசியல் கடையைத் திறந்திருக்கின்றார். கோத்தாவிற்கு ஆதரவளிக்குமாறு சொல்கின்றார். டக்ளஸ் தேவானந்நதா, கருணா போன்றோர் சொல்கின்றனர். இன்னும் பலர் சொல்ல இருப்பார்கள். கோத்தாவிற்கு வாக்களிக்குமாறு நாங்கள் சொன்னால்கூட நீங்கள் அதை ஏற்கமாட்டீர்கள். நாங்கள் சொல்லவும் மாட்டோம்.

அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் ஒரு முற்போக்கான அரசியல்வாதி தான். மற்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது ஊழல் மோசடிகள் எதுவுமற்ற முற்போக்கான இளைஞர்களை பிரதிபலிக்ககூடிய அரசியல்வாதியாக இருக்கின்றார்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் வேட்பாளர் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

இதனையெல்லாம் ஒப்பிடும்போது எமக்கு அதிகளவான தீமைகளை விளைவித்தவர்கள் யார்?, இனியும் தீமையினைசெய்யக்கூடியவர்கள் யார்?.அவர்கள் எங்களுக்கு தேவையில்லை.எங்களுக்கு ஓரளவு
நன்மைசெய்யக்கூடியவர்கள் யார்,எங்களது அரசியல் தீர்வினை ஓரளவுக்கு வழங்கக்கூடியவர்கள் யார்,எங்களது அபிவிருத்தியை கவனிக்ககூடியவர்கள் யார்,கைதிகள், காணாமல்ஆக்கப்பட்டோர்
தொடர்பில் கவனத்தில் கொள்பவர் யார், காணிகளை விடுவிக்கக்ககூடியவர்கள் யார் போன்றவற்றினை போன்றவற்றினை பொதுவான மதிப்பீடுசெய்து மக்களுடன் ஆலோசனைகளைப்பெற்று முடிவுகளை எடுப்போம்.எதேச்சதிகாரமாக முடிவுகளை எடுக்கமாட்டோம்.

ஆனால் மக்கள் இவரைத்தான் ஆதரிக்கவேண்டும் என்று சொல்லதுவங்கிவிட்டார்கள். மக்களுக்கு மாறாக நாங்கள் முடிவெடுக்கமுடியாது.மக்கள் சொல்லும் காத்திரமான,புத்திசாலித்தனமான
முடிவுகள்,எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத முடிவுகள் ஏற்படுகின்றபோது அந்த முடிவுகளுக்கு நாங்கள் செல்லவேண்டிய நிலைமையேற்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவும் மைத்திரியும் போட்டியிட்டபோது யாரை தூக்கியெறியவேண்டும் என மக்கள் தீர்மானித்தனர்.யார் வெற்றிபெறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும். தோற்கடிக்கவேண்டியவரை நாங்கள் தோற்கடித்துதான் ஆகவேண்டும்.

Exit mobile version