Tamil News
Home செய்திகள் ஜனாதிபதித் தோ்தலை இலாவகமாகக் கையாள வேண்டும் – வலியுறுத்துகிறாா் சுமந்திரன்

ஜனாதிபதித் தோ்தலை இலாவகமாகக் கையாள வேண்டும் – வலியுறுத்துகிறாா் சுமந்திரன்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாகும். இதனை இலாவகமாக கையாள வேண்டும்” என்று கூறிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படலாம்” என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமராட்சி கிளை பணிமனையில் நேற்று நடந்த புதுவருட கொண்டாட்டம் – கைவிசேசம் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குமார் பொன்னம்பலம் முதல் சிவாஜிலிங்கம் வரையானவர்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்.

அவர்களுக்கு தமிழ் மக்கள் அளித்த பெறுபேறுகள் எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆகவே, இது குறித்த தீர்மானம் எடுக்கும்போது இந்த சரித்திர பின்னணியும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் மீளவும் நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்ட அவர், “கச்சத்தீவு விவகாரம் ஒரு விவகாரமே அல்ல, அதை தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்தியாவில் ஒரு தரப்பினர் கையில் எடுத்துள்ளனர். அது தேர்தலோடு முடிந்து விடும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version