சொந்த ஊர்களுக்குத் திரும்பும் சிரியா மக்கள்

சிரியாவின் ஹமா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்த ஹமா மாகாணத்தில் உள்ள கனஸ் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும் மக்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர். சிரியா போருக்கு முன்னர் இப்பகுதியில் 21,000இற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்தனர்.

போர் காரணமாக தங்கள் வேலை, குடியிருப்பு பகுதிகளை விட்டு மக்கள் அகதிகளாக பிற பகுதிகளுக்கு வெளியேறினர். தற்போது சிரியாவில் இயல்பு நிலை திரும்பி வருவதால் மக்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். சுமார் 10,000 மக்கள் வரை தங்கள் சொந்த பகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர்“ என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்திற்கும் ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வேறு நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.