செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி தங்கியிருந்த பௌத்த பிக்கு மரணமானார்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி குடியிருந்த பௌத்த தேரரான கொலம்பே மேதாலங்காதர தேரர் புற்றுநோய் காரணமாக இன்று (21.09) கொழும்பில் உயிரிழந்தார்.

இந்த ஆலயம் காலங்காலமாக தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமாக இருந்து வந்தது.  ஆனால் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் மக்கள் மீளக்குடியமராத காலப்பகுதியில் இராணுவத்தினரின் துணையுடன் அங்கு பௌத்த விகாரை அமைப்பதில் ஈடுபட்டு வந்த இந்த பௌத்த துறவி, அது பௌத்தர்களின் பண்டைய வழிபாட்டிடம் என்று கூறி, அங்கு அத்துமீறி குடியமர்ந்தார். அங்கு அமைக்கப்பட்ட விகாரைக்கு குருகந்த ரஜமகா விகாரையென பெயரும் சூட்டப்பட்டது.

தொடர்ந்து செம்மலை பிள்ளையார் ஆலயத்தையும் கணதேவி தேவாலயம் என சிங்களத்தில் பெயரிட்டு அடாவடி செய்து வந்தார். இராணுவம், பொலிசார், தொல்லியல்துறையின் ஆதரவுடன் தமிழர் வழிபாட்டிட அபகரிப்பையும் மேற்கொண்டு வந்தார்.

இருந்தும் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து பிள்ளையார் ஆலயம் மீட்கப்பட்டது. ஆனால் ஆலய வளாகத்தில் தடையையும் மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு சிலைகளும் கட்டப்பட்டு வந்தன.

இதேவேளை இது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த தேரருக்கு புற்றுநோய் என அவரின் சட்டத்தரணியினால் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில், நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த வழிபாட்டிடம் அமைந்திருந்தமைக்கான எந்த தடயமும் இருக்கவில்லையென தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை குருகந்த ரஜமகா விகாரைக்கு எடுத்து வந்து அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதை எச்சரிக்கையுணர்வுடன், அவதானித்து வருவதாக தமிழர் மரபுரிமை பேரவை தரப்பினர் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்ற உத்தரவின்படி குறித்த பகுதியில் மாற்றங்கள் செய்ய முடியாது என்பதனால், தேரரின் உடலை அடக்கம் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.