சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

உலக இயற்க்கைச் சூழல்த்தொகுதியில் மனிதன் ஓர் விலங்கு என்பதை மனிதன் ஏனோ மறந்துவிடுகிறான். அவ்வப்போது அவனைச் சுற்றி நடக்கும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிச்சரிவு போன்ற பாரிய சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளால் ‘சுடலை ஞானம்’ போல சிறிது நேரம் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலைப்பற்றிச் சிறிது சிந்திக்கத் தலைப்பட்டாலும் அவனது நாளாந்த இயந்திர வாழ்க்கை அவற்றை இலகுவில் மறக்கச் செய்துவிடும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகளிலொன்றாகிய அதிகரிக்கும் வேகத்தில் அதிகரிக்கின்ற சனத்தொகைப் பெருக்கமும், அச்சனத்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கான நிலம், நீர், காடுகள், கனியங்கள் போன்ற அதிகரித்த வளப்பயன்பாடுகளும், அவற்றால் ஏற்படும் குறுங்கால, நீண்ட கால விளைவுகளும் ஒட்டுமொத்த இவ்வுலகத்தயே மீளமுடியாத அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லுகின்றன என்பது வெள்ளிடைமலை. ஆனாலும் மனித இனத்தின் வரையறையற்ற சுயநலப்போக்கு தம்மைச் சுற்றியுள்ள சூழலத்தொகுதியைப் பற்றியோ, சக விலங்குகளை பற்றியோ சிந்திப்பதை முற்றாக்கத் தடுத்துவிடுகின்றது.

தென்னாசிய நாடுகளில் சுற்றுச்சூழலுக்கான நெருக்கடிகள்:

மேல்மத்திய, கீழ்மத்திய வருமானங்கள் கொண்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்துவரும் சனத்தொகையும், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெருத்துவருகின்ற நடுத்தர, மிகை வருமானங்கள் கொண்ட மக்கள்தொகையும் அவர்களின் குடியிருப்பு, சக்திநுகர்வு, உடை, நீரியல் தேவைகள், ஆடம்பர பொருட்கள் போன்ற பல்வகைத் தேவைகளின் அதிகரிப்பும் அதனால் ஏற்படுகின்ற காடழிப்பு, நகரமயமாக்கல், பெருந்தெருக்கள் அமைத்தல், அதிகரித்த கட்டுமானப்பணிகள், நன்னீர்நிலைகள் அழிவடைதல் என்பன இருக்கின்ற இயற்க்கைச் சூழல்தொகுதியை என்றுமில்லாதவாறு அழிவுக்குள்ளாக்குகின்றன.deforestation சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

முக்கியமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலே அதிகரித்த காடழிப்புச் சம்பவங்கள், நன்னீர்நிலைகள் தூர்ந்த்துபோதல் அல்லது குடியிருப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படல் என்பன காடுகள், நன்னீர்நிலைகள் என்பனவற்றில் காணப்படும் பலவகை உயிரினங்களின் இடப்பெயர்வுக்கும், அழிவுக்கும் காரணமாகின்றன.

இலங்கையின் சுற்றுச் சூழல்:

மிகச் சிறிய தீவான இலங்கையைப் பொறுத்தவரையிலே மற்றைய நாடுகள் போல் அங்கு காணப்படும் அதிகரித்த சனத்தொகை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் அதிகரித்த நிலைப்பாவனையும் அதன் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைந்த காடுகளை அதிகளவில் அழிவுக்குள்ளாக்குகின்றன.

இதனால் பல தாவர, விலங்கினங்கள் அழிவுக்குள்ளாகி, அங்குள்ள உயிரினப்பல்வகைத்தன்மை அருகிவருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய நிறுவனத்தகவல்களின்படி 1990 இலே 2 .4 மில்லியன் ஹெக்டராகக் காணப்பட்ட காடுகளின் பரப்பளவு 2010 இலே 1.9 மில்லியன் ஹெக்டராகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வடகிழக்கு இலங்கையின் நிலை:

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் காடுகள் கணிசமான பங்கை வகிக்கின்றன. அதேபோல பாரிய குளங்கள் போன்ற நன்னீர்நிலைகள் யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் அதிகளவு காணப்படுகின்றன. 2009 இலே நடைபெற்ற பாரிய யுத்தம் காரணமாக வடமாகாணத்தின் வன்னிப்பெருநிலப்பரப்பில் காடுகளுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாது முன்னெப்போதுமில்லாதவாறு வனவிலங்குகள் பேரழிவைச் சந்தித்தன. இதனால் தாவர விலங்குகளின் பல்வகைத்தன்மை அங்கு கேள்விக்குறியாகி நிற்கின்றது.

வடகிழக்க்கில் விவசாயத் செயற்பாடுகள் இயற்க்கைச் சூழல் தொகுதியில் செலுத்தும் தாக்கம்:

‘விவசாய பசுமைப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன்பு வடகிழக்கில் விவசாயிகள் இயற்க்கையோடொன்றித்த விவசாயத்தை மேற்கொண்டனர். காலங்காலமாக சுதேசமாகப் பெருக்கிக் காத்துவந்த விதையினங்கள் பயிர்களாயின, அத்தோடு விலங்குகள், தாவரங்களிலிருந்து பெறப்பட்ட கழிவுகளும் தாவரங்களுக்கு உரமாயின. வடகிழக்கில் மிக அதிகளவான ஒருங்கிணைந்த பண்ணைமுறைமைகள் பழைய காலங்களிலே புழக்கத்திலிருந்தன. சூழலோடொன்றிணைந்த, நட்பியல் விவசாயமுறைமைகள் கைக்கொள்ளப்பட்டன.ferilizer application சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

பசுமைப்புரட்சியின்பின்னர் அசேதன இரசாயனங்கள் உரங்களாகவும், கிருமிநாசினிகளாகவும் விவசாயத்திலே பயன்படத்தொடங்கின. விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்தது. ஆனால் விவசாய நிலங்கள் தமது இயற்க்கையை, கருவளத்தை இழந்தன. நிலங்கள் அசேதன இரசாயனங்களை மட்டுமே பதிலளிக்கத் தொடங்கின. பாரம்பரிய விதையினங்கள் பாவனையிலிருந்து அருகின. புதிய புதிய கலப்பினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவைகளில் பூச்சி, பீடைகள் தாக்கம் அதிகரிக்கவே பூச்சி, பீடை நாசினிகளின் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரிக்கத் தொடங்கியது.

அதிகரித்த உரங்கள், பீடைநாசினிகள்  போன்ற அசேதன இரசாயனங்களின் பாவனையால் ஏற்பட்ட விளைவுகள்:

அதிகரித்த அசேதன இரசாயனங்களின் பாவனையால் விவசாயம் செய்கின்ற மண்ணிலே உள்ள நுண்ணங்கிகள், பூச்சியினங்கள், மண்புழுக்கள், நத்தைகள் மற்றும் ஊரும் விலங்குகள் அழிவடையத் தொடங்கின. இதனால் சேதனப்பொருட்கள் மண்ணிலே உக்குவது இல்லாதொழிக்கப்பட்டது. அத்தோடு அதிகரித்த பீடை நாசினிப்பாவனையால் நன்மைதரும் பூச்சியினங்களான தும்பிகள், லேடிபேட் வண்டுகள், மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமான தேனீக்கள் என்பன பாரிய அழிவைச் சந்தித்தன. ஆக மொத்தத்தில் இயற்கை விவசாயச் சூழற்றொகுதி முற்றாகக் குழப்பமடைந்துவிட்டது.

இதைவிட இவ் அசேதன இரசாயனங்கள் குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற நன்னீர்நிலைகளுடன் கலப்பதால் அது மனிதனுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் மிகப்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக வட இலங்கையிலே அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள புற்றுநோய்கள், சிறுநீரக நோய்கள், வேளாண் விலங்குகளின் அதிகரித்த இறப்புக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

சில விவசாயிகளின் சுயநலத்தோடு கலந்த அசேதன இரசாயனப் பாவனை:

இங்கு நான் குறிப்பிடும் சில விவசாயிகள் தமது சுயநலம் ஒன்றை மட்டுமே கருதிக்கொண்டு பின்வரும் வழிகளிலே தாம் வாழும் சமூகங்களுக்குத் துரோகமிழைக்கின்றார்கள். மரக்கறிகளுக்கு பீடைநாசினிகள் தெளித்தபின் அப்பீடைநாசினிகள் முற்றாக்கச் செயலிழக்கும் காலம் மட்டும் பொறுத்திருக்காது உடனேயே மரக்கறிகளை சந்தைப்படுத்துகிறார்கள்.chemical injected banana சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)

சில விவசாயிகள் சந்தைப்படுத்தலுக்கு வசதியாகத் தங்கள் விளைபொருட்களுக்கு நேரடியாக இரசாயனத்தைப் பிரயோகிக்கிறார்கள். உதாரணமாக சில விவசாயிகள் வாழைக்குலைகள் மரத்திலிருக்கும்போதே அவற்றிக்கு யூரியா கட்டிவிடல், மாங்காய்களை, வாழைக்காய்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காக செயற்கை இரசாயனங்களை ஊசி மூலம் ஏற்றுதல் என்பன.

எம்மக்களின் நிலைபேறான வாழ்வியலில் விவசாயச் சுற்றுச்சூழல் பேணல்:

இலங்கையின் வடகிழக்கில் யுத்தத்தால் அழிவடைந்து, நலிந்திருக்கும் எம் மக்கள் மீண்டும் பலத்துடன் மீண்டெழவேண்டின் எம்மக்கள் ஒவ்வொருவரும் தாம் வாழும் சுற்றுச்சூழல்த்தொகுதிகளை மிகுந்த ஆரோக்கியமாகவும்,, மனித நீண்டகால வாழ்தகவுக்கேற்றதாகவும் பேணவேண்டிய கடப்பாட்டுக்குரியவராவார்கள். தாம் மட்டுமல்லாது தமது பிற்கால சந்ததிகளும் நீடித்த நிலைபேறான ஆரோக்கிய வாழ்வை வாழவேண்டின் இதைவிட வேற்று வழியில்லை. இதிலே விவசாயிகளின் பங்கு அளப்பரியது.

விவசாயிகள் இயற்க்கைக்கு மீள்தல்:

இலங்கையின் வடகிழக்கிலுள்ள விவசாயிகள் தம் சக மனிதர்களின் ஆரோக்கியமான நிலைபேறான வாழ்வியலில் மட்டுமல்லாது, தம் வாழுகின்ற சூழலிலே உள்ள உயிரினங்களின் பல்வகைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான தார்மீகப் பொறுப்புக்குட்பட்டிருக்கிறார்கள். இதற்குள்ள ஓரேயொருவழி அசேதன விவசாயத்தைப் படிப்படியாகக் கைவிட்டு இயற்க்கையோடிணைந்த விவசாயத்துக்கு  மீண்டுசெல்வதுதான்.

உயிர் உரம், உயிர்ப்பீடைநாசினிப் பாவனையை அதிகரித்தல்:

‘உயிர் உரங்கள்’ என்பன உக்கல்கள், மற்றும் பசுந்தாட்ப்பசளைகளைப் போலல்லாது மிக நவீன முறையிலே தயாரிக்கப்படும் சிறுமணிகள் போன்ற நுண்ணங்கிகள். இவற்றைத் தாவரங்களுக்கு விசுறும்போது அவை தாவரங்களுக்குத் தேவையான போஷணைச் சத்துக்களை வழங்குகின்றன.

516175 சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்கு-பேடினண்ட் மோசஸ் (விவசாயமாணி இலங்கை)அத்தோடு இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எத்தீங்குகளும் விளைவிக்காதவை. ரைசோபியம், அசட்டோபாக்டர், அசோஸ்பிரில்லம், சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள், நீலப்பச்சை அல்காக்கள், அசோலா என்கிற பன்னம் என்பன இவற்றுள் அடங்கும். உயிர் பேஈடைநாசினிகள் ஏற்று வரும்போது பூச்சிகளில் நோய்களை உருவாக்கும் பூஞ்சண வகைகள், புழுவகைகள், மற்றும் பயிரித்திரம், ரெட்டினொன், வேப்பெண்ணை, மற்றும் பெற்றோமோன்ஸ் போன்ற உயிர் சேதன இரசாயனங்கள் என்பவை அடங்கும்.

ஒருங்கிணைந்த பண்ணைமுறைப் பயன்பாடு:

நிலைபேறான விவசாயத்துக்கும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணலுக்கும் ஒருங்கிணைந்த பண்ணைமுறைமையே சிறந்த தீர்வாகும். இவ்வாறான பண்ணைமுறைகளிலே விவசாயிகள் தனியொரு பயிரையோ அல்லது விலங்கையோ வருமானத்துக்கு நம்பி இருக்காமல், பல்வகைப் பயிர்களையும், விலங்குகளையும் ஒன்றாக வளர்ப்பதன்மூலம் சிறந்த சூழலியற்ச் சமநிலையை உருவாக்கமுடியும்.  அத்தோடு அவர்களை நம்பியிருக்கும் நுகர்வோர்களையும் நீண்ட ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக வாழுவதற்கு உதவுவதாகவுமிருக்கும்.

 

பேடினண்ட் மோசஸ்– விவசாயமாணி (இலங்கை)கலை முதுமாணி (லண்டன்) திட்ட முகாமைத்துவ திப்புளோமா (அயர்லாந்து)