Home ஆய்வுகள் சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்

சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்

மே மாதம் முதலாம் திகதி மே தினம் – இந்த நாள் தொழிலாளர்களுக்கானது. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் வலியுத்துகின்றதோர் உன்னதமான தினம்.

தொழிலாளர்களை வர்க்க ரீதியாக ஒன்றிணையச் செய்வது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. தொழிலாளர்களுடைய ஒன்றிணைந்த வலிமையையும் பெருமையையும் அவசியத்தையும் வலியுறுத்துவது இந்தத் தினத்தின் சிறப்பம்சம்.

ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுக்கின்ற அமெரிக்காவில் 1800 களில் தொழிலாளர்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. போதிய ஓய்வு இல்லை. அவர்களின் நலன்கள் கவனிக்கப்படவில்லை. அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டார்கள். வருந்தி உழைத்த தொழிலாளர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை. முதலாளி வர்க்கம் அவர்களைச் சுரண்டியது. அவர்களின் உழைப்பில் அனைத்து நலன்களையும் இலாபங்களையும் அவர்களே அனுபவித்தனர்.

தாங்கள் வறுமையில் வாட தமது கடின உழைப்பில் முதலாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதை உணர்ந்த அமெரிக்க தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தை முதலாளிகள் புறமொதுக்கினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தனர்.

முதலாளிகள் என்ற மேலாண்மை மனப்பாங்கில் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அரசு அடக்கு முறையைப் பயன்படுத்தியது. ஆனால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாகத் தமது போராட்டங்களை முன்னெடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்க அரசு முயன்றது.

பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை நெருக்கியது. துன்புறுத்தியது. போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆயினும் தொழிலாளர்கள் பின்வாங்கவில்லை. உறுதியாக ஒற்றுமையாகத் தொடர்ந்த அவர்களுடைய போராட்டம் வேலை நிறுத்தமாகப் பரிணமித்தது. எட்டு மணி நேர வேலை. வேலைக்கேற்ற ஊதியம். உழைப்புக்கு ஏற்ற ஓய்வு என தமது கோரிக்கைகளை முன்வைத்த அந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாடு தழுவிய அளவில் விரிவடைந்தது.

அன்றும் இன்றும் போராட்டத்தைச் சீர்குலைத்து தொழிலாளர்களை வழிக்குக் கொண்டு வருவதற்காக அரசு வன்முறையைக் கையில் எடுத்தது. தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள். துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் மீது பாய்ந்தன.  தொழிலாளர்கள் பலியானார்கள். அங்கு 1890ஆம் ஆண்டு அந்தத் தொழிலாளர்கள் சிந்திய குருதியில் அமெரிக்க மண் சிவந்தது. ஆயினும் அந்தத் தொழிலாளர்கள் தளரவில்லை. தமது போராட்டத்திலும் கோரிக்கையிலும் இரும்புப் பிடியாக இருந்தார்கள்.00069989 thumb 630x503 27667 சூனியமான எதிர்காலத்தைக் கட்டியம் கூறும் மேதினம்-பி.மாணிக்கவாசகம்

வர்க்க ரீதியான அந்த தொழிலாளர்களுடய உறுதியின் முன் அமெரிக்க அரசு துவண்டு போனது. தொழிலாளர்கள் தமது போராட்டத்தில் வெற்றி அடைந்தார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தினமே செந்நிறக் கொடியைக் கொண்ட அடையாளத்துடன் அகில உலகத்திலும் மேதினமாக – தொழிலாளர் தினமாக வருடந்தோறும் அகிலமெங்கும் கொண்டாடப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கான இந்த தினம் – தொழிலாளர்களுடைய இந்த நாள் இப்போதெல்லாம் தொழிலாளர்கள் மட்டுமல்ல. முதலாளி வர்க்கத்தினரும் கொண்டாடுகின்ற ஒரு தினமாகி விட்டது. இலங்கையில் தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாமல் முதலாளித்துவ கொள்கையைக் கொண்ட கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மேதினத்தில் பேரணிகளை நடத்தி பொதுக் கூட்டங்களைக் கூட்டி கொண்டாடுகின்றன.

தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் உரிமைகள், நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும் மறுக்கப்படுகின்ற தொழிலாளர்களின் உரிமைக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுப்பதைக் காண முடிகின்றது. ஆனால் ஏனைய கட்சிகள் அன்றைய தினத்தை ஒரு கொண்டாட்ட தினமாகப் பேரணிகளில் பாடி ஆடி கொண்டாடுவதுடன் பொதுக் கூட்டத்தைக் கூட்டி அரசியல் பேசி விட்டுச் சென்று விடுகின்றன.

ஆனால் இம்முறை இந்த தினத்தில் உலக நாடுகள் கொரோனாவின் கொடும் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. மே தினம் சோபை இழந்துள்ளது. சோக தினமாகியுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் தொழில்களை இழந்தவர்களாக வீடுகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாள் ஓர்  ஊமையான ஒரு தினமாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகத் தொழிலாளர்களை நோக்கி கோரப் புன்னகையைச் சிந்திக்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் மே தினத்தைக் கொண்டாட முடியாத நிலைமைகள் இதற்கு முன்னரும் உருவாகியிருந்தன. விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்தம் தீவிரமடைந்திருந்த தருணங்களில் வடக்கிலும் கிழக்கிலும் மேதினம் இராணுவ அடக்குமுறை காரணமாக சோக தினங்களாக மாறியிருந்தன. மே தினத்தை அனுட்டிக்க முடியாமல் யுத்த மோதல்களில் சிக்கி தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பலரும் பதுங்கு குழிகளில் ஒடுங்கி இருந்தார்கள்.

மே 7 ஆம் திகதி மேதினமா…? யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்கள் மீது அரசு மேற்கொண்டிருந்த (விமான தாக்குதல்கள், மோசமான பொருளாதாரத் தடைகள், உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அடக்குமுறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்டிருந்த விநியோகத் தடைகள் உள்ளிட்ட) இராணுவ  நெருக்கீடுகளுக்கிடையில் அவ்வப்போது கிடைத்த சிறிய இடைவெளிகளைப் பயன்படுத்தி அவ்வப்போது சில சில இடங்களில் சிறிய அளவில் மேதினம் அனுட்டிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு முடிவு கட்டிய பின்னர் மேதினத்தை அரசு தென்னிலங்கையில் வெற்றிப் பெருமிதத்தில் கொண்டாடிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. யுத்த நெருக்கடிகளுக்கு அப்பால் மத ரீதியான காரணத்திற்காகவும் மே முதலாம் திகதியன்று மேதினத்தைக் கொண்டாடாமல் வேறு திகதிக்கு இலங்கை அரசு பின்போட்டிருந்த நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இலங்கை சிங்கள பௌத்தர்கள் தமது முக்கிய பண்டிகையாகிய வெசாக் பண்டிகையை ஒருவார காலம் கொண்டாடுவது வழக்கம். அதற்கமைய 2018 ஆம் ஆண்டு மே தினத்தை உள்ளடக்கியதாக ஏப்ரல் 26 முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் வெசாக் திருவிழா வாரமாக அமைந்தது. இதனால் அந்த வருடம் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படவில்லை. அரசு மேதினத்தை ரத்துச் செய்து மே 7ஆம் தகதிக்குப் பின்போட்டிருந்தது.

இலங்கையின் 1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 10 (01) பி, 11 (01) பி ஆகிய சட்ட ஏற்பாட்டுப் பிரிவுகளின் கீழ் அன்றைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சர்வதேச தொழிலாளர் தினமாகிய மே முதலாம் திகதியை வெசாக் திருவிழா வாரத்தையொட்டி ரத்துச் செய்வதாகவும், 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினம் மேதினம் மே மாதம் 7 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் என்று வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தார்.

விமர்சனங்களுக்கு மத்தியில் வரலாற்றில் முதற் தடவையாக இலங்கையில் அந்த வருடம் மே 7ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகிய மேதினம் அனுட்டிக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் நாள் கடந்தும்கூட மேதினத்தை அனுட்டிக்க முடியாத சூழலையே கொரோனா வைரஸ் உருவாக்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்கும் கொரோனா வைரஸ் வழிவகுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக வெளியிடங்களில் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த கிட்டத்தட்ட 55 ஆயிரம் தொழிலாளர்கள் தலைநகர் கொழும்பில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அதிர்ச்சியளிக்கின்ற இந்த நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றார்கள். ஆனாலும் அதிகாரத் தரப்பில் இருந்து எழக்கூடிய பின்விளைவுகளைக் கருத்திற் கொண்டு மனிதாபிமான அமைப்புக்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும்கூட வாய்மூடி மௌனம் காக்கின்ற போக்கைக் கடைப்பிடித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

தலைநகரில் தவிக்க நேர்ந்துள்ள தொழிலாளர்கள் இந்தத் தொழிலாளர்களின் அவல நிலைமைகள் பற்றிய தகவல்களை சுயாதீன துறை சார்ந்த நிபுணர்களின் ஒன்றியம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.  இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நாட்கூலி மற்றும் மாதச் சம்பள தங்கு வேலைக்காகச் சென்றுள்ள 43 ஆயிரம் பேர் கொரோனாவின் நெருக்கடி நிலைமைகளையடுத்து தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே போன்று இந்தியா, பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பேர் வரையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்க நேர்ந்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது நிறுவனங்கள் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து உணவளித்துப் பாதுகாத்தன. அரசாங்கமும் அவர்களுக்கு நிவாரணப் பொதிகளின் ஊடாக உதவியளித்திருக்கின்றது. ஆனால் உள்ளூர் தொழிலாளர்கள் பணியாற்றிய நிறுவனங்களிலும், ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனியாரும், ஒப்பந்த நிறுவனங்களும் தமது தொழிலாளர்களை உரிய முறையில் கவனிக்கவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் நிறுவனங்களினால் கைவிடப்பட்ட இவர்களைப் பற்றி அரசாங்கமும் உடனடியாகக் கவனம் செலுத்தியிருக்கவில்லை. இதனால் இந்த உள்ளூர் தொழிலாளர்கள் பட்டினி நிலைமைக்குத் ஆளாக நேர்ந்துள்ளது.

தொழிலுக்காக வந்த இடத்தில் தொழில் செய்ய முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. முழு முடக்க நிலைக்கு நாடே ஆளாகியிருக்கின்றது. வெளி மாவட்டடங்களுக்கு இடையிலான போக்குவரத்து உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வெளியில் நடமாட முடியாது. வீட்டிற்கும் போக முடியாது. உணவுக்கும் வழியில்லை. இந்த நிலையில் வேலைக்கு வந்த இடத்தில் எப்படி முடங்கிக் கிடப்பது? இந்த நிலையில் இந்தத் தொழிலாளர்களும் ஏனைய பணியாளர்களும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த நிலைமையில் கொழும்பில் இருந்து மலையகப் பகுதியில் பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு 48 வயதுடைய பெண்மணி ஒருவர் கால் நடையாகப் பயணம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்து அவர் தனது வீட்டைச் சென்றடைந்துள்ளார். மருத்துவ பாதுகாப்புக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று வவுனியாவைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பில் இருந்து தனது வீட்டிற்குக் கால் நடையாகப் பயணம் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அவரைப்பற்றிய தகவல்களை உடனடியாகப் பெற முடியவில்லை. இந்த இரண்டு சம்பவங்களும் உண்மையான சம்பவங்களா என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிய வேண்டும் என்பது ஒருபக்கம் இருக்க இத்தகைய மிக மோசமான அவல நிலைமைக்கே தலைநகருக்குத் தொழிலுக்காகச் சென்ற தொழிலாளர்களும் பணியாளர்களும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது துல்லியமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு கவனிப்பார் எவருமின்றி கைவிடப்பட்ட நிலையில் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் உனடடியாக நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைத் தாமதமின்றி செய்ய வேண்டும்.

புறக்கணிப்பு நிலைமை பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பரவலையடுத்து ஏனைய துறை சார்ந்தவர்களைப் போன்று முடக்க நிலைமைக்கு ஆளாகியுள்ள போதிலும், அரசாங்கத்தின் கொரோனா நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படவிலலை. புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று பரவலாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

பெருந்தோட்டத்துறை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் நேரடியாக கிராம சேவகர்களுடைய நிர்வாகப் பொறிமுறைக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்கும் கண்காணிப்புக்கும் உள்ளாகியிருக்கின்றனர். வெள்ளம், வரட்சி போன்ற காலநிலை சார்ந்த இடர்களின்போது அவர்கள் அரசாங்கத்தின் நேரடி நிவாரண உதவித் திட்டங்களின் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

ஆனால் பெருந்தோட்டத்துறை மக்கள் அரசாங்கத்தின் நேரடி கவனத்தில் இல்லாமல் தோட்டத் தொழிற்துறை கட்டமைப்புக்கு உட்பட்டிருப்பதனால் அவர்களுடைய நலன்களை தோட்டக் கம்பனிகளே கவனிக்க வேண்டும் என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை அரசு கடைப்பிடித்து வருகின்றது.

இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்களாகவும் வாக்குரிமை பெற்றவர்களாகவும் திகழ்கின்ற பெருந்தோட்டத்துறையினருடைய வாக்குகளை வேட்டையாடுவதில் மாத்திரமே அரசு தீவிர கவனம் செலுத்துகின்றது. சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் அனுகூலங்களை வழங்குவதில் அரசு அக்கறை செலுத்துவதில்லை. இது காலம் காலமாகவே செயற்பட்டு வருகின்றது. எனினும் அவர்களின் நேரடி பிரதிநிதிகளாகிய தொழிற்சங்கம் சார்ந்த அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் இந்தப் பாரமுகமான நடவடிக்கைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முயலவில்லை. அல்லது வெற்றிதரத்தக்க வகையிலான அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றே கூற வேண்டும்.

இதேபோன்று ஆடை உற்பத்தித் தொழில்துறை சார்ந்த தொழிலாளர்களாகிய பெண்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களது நலன்களை ஆடைத் தொழிற்துறை சார்ந்த கம்பனிகளே கவனிக்க வேண்டும் என்ற நிலையில் அரசாங்கம் அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதே போன்று உல்லாசப் பயணத்துறை துறை சார்ந்த தொழிலாளர்களையும் அரசு கவனிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உற்பத்தியைப் பிரதானமாகக் கொண்டுள்ள பெருந்தோட்டத்துறை, ஆடைத் தயாரிப்புத் தொழிற்துறை ஆகியன ஏற்றுமதியின் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்றன. அதே போன்று உல்லாசப் பயணத்துறையும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுத்து அந்நியச் செலவாணியை நாட்டுக்குப் பெற்றுக் கொடுப்பதில் முன்னணி வகிக்கின்றது. ஆனால் இந்த மூன்று துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களையும் கொரோனா பேரிடர் காலத்தில் அரசாங்கம் கவனிக்கத் தவறியிருக்கின்றது என்பது கவலைக்குரியது.

சூனியத்தையே எதிர்வு கூறுகின்றது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டள்ள முடக்க நிலை காரணமாக நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்ற இந்த மூன்று துறைகளும் உடனடி பாதிப்புளுக்கு மட்டுமல்லாமல் நீண்டகால பாதிப்புக்கும் ஆளாக நேரட்டுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்புவதற்காகவும் நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற வெளிநாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது. அதே போன்று ஆடை ஏற்றுமதியும் முற்றாகத் தடைபட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளின் வருகை குறித்துப் பேசவே வேண்டியதில்லை. கொரோனாவின் பாதிப்பும் அச்சுறுத்தலும் முடிவுக்கு வந்தாலும்கூட, இந்த மூன்று துறைகளும் உடனடியாகவே வழமைக்குத் திரும்பும் என்று கூறுவதற்கில்லை.

இலங்கையிலும் பார்க்க மிக மோசமான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபட்ட உடன் இலங்கையின் தேயிலையையும், ஆடைகளையும் இறக்குமதி செய்யத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இந்த இரண்டு உற்பத்திகளுமே அந்த நாடுகளின் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் உடனடியாக இடம்பெற மாட்டாது என்பது நிச்சயம். அதேபோன்றுதான் உல்லாசப் பயணிகளின் வருகையையும் உனடடியாக எதிர்பார்ப்பதற்கில்லை.

எனவே, கொரோனாவின் முடக்க நிலை காரணமாக வயிற்றுப்பாட்டுக்கு வழியற்ற நிலைமைக்கு ஆளாகியிருப்பதுடன் நடமாட முடியாத காரணத்தினால் சர்வதேச தொழிலாளர் தினமாகிய மேதினத்தை அனுட்டிக்க முடியாத நிலைமைக்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அத்துடன் சோகம் நிறைந்த 2020ஆம் ஆண்டு மேதினம் சூனியமான எதிர்கால நிலைமையையே கட்டியம் கூறி நிற்கின்றது.

 

 

Exit mobile version