Tamil News
Home நிகழ்வுகள் சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’  (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.

ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூலானது தமிழீழ தேசத்தின் கட்டமைப்புகள் பற்றி எடுத்துக்கூறுகிறது. எட்டு பாகங்கள் மற்றும் இருபத்தாறு அத்தியாயங்கள் கொண்டதாக  இந்நூல் அமைவதுடன்  தொடர்புடைய கட்டுரைகள், ஒளிப்படங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இந்நூலின் தமிழ் பதிப்பும் பின்னர் வெளியிடப்படுமெனவும் அறியமுடிகிறது.

இந்நூல் வெயியீடுபற்றி அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

நொடிகள் மெதுவாகக் கரைந்தோடி தமிழ் இனவழிப்பின் தசாப்தத்தை அம்பலப்படுத்தும் வேளையிலும் அவ்விளைநிலத்தில் பிறந்த அடிபணியா சித்தாந்தங்களோ அந்த மணல் துளிகளில் தோய்ந்து கிடக்கின்றன.

சர்வதேச கூட்டுச்சதிகளுடன் நின்றாடும் வழிதவறிய அமைதி காப்பவர்களின் சுழலும் புயலுக்கு மத்தியில்,  நந்திக்கடலின் கடற்கரைகளில் எம்பாதங்களை நிலையாகப் பதித்து சாம்பல் பறவைகளாய் நாம் தலைநிமிர்த்தி முரசறைவது யாதெனில் தமிழ் இறைமை என்றும் விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்பதாகும். இந்த வாசகங்களோடு இளைஞர்கள் சாம்பல் பறவைகளாய் கிளர்ந்தெழுந்து ஆக்கியிருக்கும் ஆவணமே இந்த நூல்…’  என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் குறித்த நூல் தொடர்பான கருத்துக்களை  இந்நூலில் பதிவுசெய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நூல் தமிழீழ தேசவிடுதலைப் போராட்டத்தின் சிறப்புமிக்க பரிமாணமொன்றை உலகெங்கும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு ஆவணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version