Home செய்திகள் சுவிஸில் அக்கினிப் பறவைகளால் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட திலீபனின் தியாக வரலாறு...

சுவிஸில் அக்கினிப் பறவைகளால் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட திலீபனின் தியாக வரலாறு (ஒளிப்படத் தொகுப்பு)

அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 15.09.2019 அன்று சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 32வது ஆண்டு நினைவுநிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தியாகி லெப். கேணல் திலீபன் நினைவாகக் கலை நிகழ்வுகளும் அரசியற் கருத்தரங்கமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

சுமார் 14.50 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்அடுத்ததாகத் தேசியக்கொடியேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரேற்றல், மலர்மாலை அணிவித்தலுடன், தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களுக்கான ஈகச்சுடரேற்றல் மற்றும் மலர்மாலை அணிவித்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

பொதுச்சுடரினை  வீரவேங்கை கலையரசி அல்லது கமலினி அவர்களின் சகோதரர் திரு ஆனந்தக்குமரன் அவர்கள் ஏற்றி வைத்தார்

தமிழீழத் தேசியக் கொடியினை முன்னாள்ப் போராளி திரு தினேஷ் அவர்கள் ஏற்றி வைத்தார்,மாவீரர் திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை மாவீரர் கப்டன் வரதன் அவர்களின் சகோதரன் திரு தனபாலசிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார் மாவீரர் திருவுருவப் படத்திற்கான மலர்மாலை மாவீரர்    ஒருவரின் சகோதரரான திரு. சூரியகுமார் அவர்களாலும், இசைக்கலைஞர் திரு நிறா அவர்களாலும் அணிவிக்கப்பட்டது.

தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடர் கேணல் நாகேஸ் அவர்களின் மகளால் ஏற்றி வைக்கப்பட்டது.

தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலை முன்னாள்ப்போராளி ஈழமதி அவர்களாலும், இளம் இசைக்கலைஞர் செல்வி வைஷ்ணவி வரதராஜன் அவர்களாலும் அணிவிக்கப்பட்டது.

அரங்க நிகழ்வில் முதல் நிகழ்வாக தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த பல்லியத்துடனான பாடல்கள் இசைக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக 1987ம் ஆண்டு லெப் கேணல் திலீபன் அவர்கள் யாழ் கோட்டையின் முன்பாக ஆற்றிய வரலாற்றில் நிலைத்த உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இளம் பாடகி ஒருவரினால் „பாடும் பறவைகள்“ பாடல் பாடப்பெற்றது.தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த பல்லியத்துடனான பாடல்கள் இசைக்கப்பட்டன.

சிறப்புரையினை Tamilnet ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு ஜெயா அவர்கள் நிகழ்த்தினார். இதன்போது, லெப். கேணல் திலீபன் அவர்களின் வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடங்கி, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பைத் தெளிவாக விளக்கினார். குறிப்பாக பூகோள அரசியலின் நலன்களுக்காகத் தமிழர்களின் மரபுரிமையினைச் சிதைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் தமிழினவழிப்பின் ஒரு வடிவமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தி தொடர்பான முதலீடுகள் ஆகும் என்பதனைத் தெளிவாக விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புரையைத் தொடர்ந்து சிறிய இடைவேளையின் பின் „யாகத்தீயில் தேகம் ஊற்றி“ எனும் பாடல் இசைக்கப்பட்டதுடன், அக்கினிப்பறவைகள் அமைப்பின் சார்பாக முடிவுரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது லெப். கேணல் திலீபன் அவர்களின் வரலாறு அக்கினிப் பறவைகள் அமைப்பினை எவ்வாறு செதுக்கியது என்பது தெளிவாக்கப்பட்டது. அத்தோடு, தற்போதைய காலகட்டத்தில் நிலவும் சிக்கல்களையும் மற்றும் எமக்கு அமைந்துள்ள வாய்ப்புக்களையும் விளக்கி, தங்கள் வரலாற்றுக்கடமையினைத் தொடர்வோம் என்பதையும் அவர்கள் உறுதியுடன் மொழிந்ததோடு, நிகழ்வு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

IMG 5716 சுவிஸில் அக்கினிப் பறவைகளால் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட திலீபனின் தியாக வரலாறு (ஒளிப்படத் தொகுப்பு)

 

Exit mobile version