சுயஸ் கால்வாய் நுழைவாயிலில் குவியும் கப்பல்கள் !

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாமல் இருக்கும்  சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகெங்கும் இடம்பெறவேண்டிய பொருட்களின் விநியோக அட்டவணையை இது பாதிக்கும் என அமெரிக்க வணிகக் கப்பலான மெர்ஸ்க் ஓஹியோவின் தலைமை பொறியாளர் ஜோ ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.

இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும்.

சுயஸ் கால்வாயில் சிக்கி முழுமையாக அப்பாதையை வழிமறித்துள்ள குறித்த எவர் கிவன் கப்பலை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் 400 மீட்டர் நீளம், 200,000 தொன் எடை கொண்ட இந்த கப்பலை அகற்றுவது பெரும் சவாலாக அமைந்துள்ளது. அடுத்துவரும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் கப்பல் அகற்றப்பட்டு நிலைமை சீராக்கப்படும் என நம்புவதாக எகிப்தின் ஜனாதிபதி  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய், ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி.

இந் நிலையில், பெருமளவு கப்பல்கள் கச்சா எண்ணெயுடன் நகர முடியாமல் சூயல் கால்வாய் எல்லையில் காத்திருப்பதால் எரிபொருள் பற்றாக்குறைக்கு பல நாடுகள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.