Home ஆய்வுகள் சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலேயே சிறீலங்கா தனது முடிவை தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் தலைவர் கோத்தபாயா ராஜபக்சா உட்பட பெருமளவான படைத் தளபதிகளும், படையினரும் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களே.

எனவே ஐக்கிய நாடுகள் சபை ஊடாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தொடருமாக இருந்தால் சிறீலங்கா அரசு மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்ல வேண்டும் அல்லது போர்க்குற்ற விசாரணைகளை சந்திக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான முன்னைய அரசு மேற்குலகம் சார்பான போக்கை கொண்டிருந்தாலும், சிறீலங்காவில் ஏற்படும் அரசியல் மாற்றம் தமது வியூகங்களில் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கணித்த அமெரிக்க அவர்களின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் 30/1 ஜ கொண்டு வந்திருந்தது. அதன் பின்னர் தனது நடவடிக்கையை முன்னெடுப்பதில் அமெரிக்கா பின்வாங்கியது போல நடித்தாலும், தனக்கு சார்பான நாடுகளான பிரித்தானியா, மசடோனியா, மொன்ரோநிக்ரோ, ஜெர்மனி மற்றும் கனடா ஊடாக இந்த தீர்மானத்தை பலப்படுத்தியிருந்தது.savendra சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஒருபுறம் தீமானம் கொண்டுவரப்பட்டபோதும், மறுபுறம் மிலேனியம் சலஞ் என்ற படைத்துறை உடன்பாட்டை சிறீலங்கா அரசின் முன்வைத்திருந்தது. இந்த உடன்பாடு தொடர்பில் ரணில் அரசு மென்போக்கையே கடைப்பிடித்திருந்தது. ஆனால் உடன்பாட்டின் மூலம் திருமலை தொடக்கம் கொழும்பு வரையிலான 7 மாவட்டங்கள் அமெரிக்கா படையினர் வசம் செல்லும் என்பதை அறிந்த இந்தியா விழித்துக் கொண்டது.

சிறீலங்காவில் ஒரு ஆட்சிமாற்றத்தை இந்தியா கொண்டுவந்து. அமெரிக்காவின் உடன்பாட்டை முறியடிக்க இந்திய வகுத்த வியூகம் தான் கோத்தபாயாவின் அரசியல் வெற்றி.தேர்தலுக்கு முன்னர் தனது உடன்பாட்டை நிறைவு செய்ய அமெரிக்கா முனைந்தபோதும், பௌத்த துறவிகளை ஏவிவிட்ட எதிர்த்தரப்பு அதனை முறியடித்திருந்தது

தனது திட்டம் தோல்வியடையும் எனக் கணிப்பிட்ட அமெரிக்கா தனது இரண்டாவது திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதுவே மனித உரிமைகள் அமைப்பில் தற்போது எதிரொலிக்கின்றது.

சிறீலங்கா அரசு தீhமானத்தில் இருந்து வெளியேறியதை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நேரிடையாக விமர்சித்துள்ளார், இணை அனுசரணை நாடுகள் அதற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளன. சிறீலங்கா வெளியேறினாலும் தாம் அதில் இருந்து வெளியேறப்போவதில்லை என மிரட்டியுள்ளன.

அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் தற்போது தீவிரமாக செயற்படுகின்றன. சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை.

படையினருக்கு வழங்கப்படும் இராஜதந்திர பதவிகள் மூலம் அவர்களுக்கு போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து விதிவிலக்கு பெறமுடியும் என நம்கின்றது சிறீலங்கா அரசு எனவே தான் பல படையினருக்கு பொது அதிகாரம் வழங்கப்படுகின்றது. ஆனால் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்த பயணத்தடை, சிறீலங்கா படை அதிகாரிகளின் உளவியலை சிதைத்துள்ளதாக தெரிவிக்கின்றார் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர்.

சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை கொண்டுவரப்படலாம் என சிறீலங்கா அரசு அச்சம் அடைகின்றது. அதன் வெளிப்பாடே தம்மீது கொண்டுவரப்படும் பொருளாதாரத் தடைக்கு எதிராக தமது நட்பு நாடுகளான சீனா மற்றும், ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என சிறீலங்காவின் அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது, ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் சீனா தலைமையில் ஆபிரிக்க, ஆசிய நாடுகளையும், இந்தியா தலைமையில் ஆசிய நாடுகளையும் மற்றும் அரபு நாடுகளையும் ஒருங்கிணைத்து அதனை முறியடிக்கலாம் என நம்புகின்றது சிறீலங்கா அரசு.

அதேசமயம் இந்த வாரம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்துள்ளது. இது அமெரிக்காவின் திட்டத்திற்கு விழுந்த பலத்த அடியாகும். ஆனால் தாம் சிறீலங்கா அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

தமது உடன்பாடு 480 மில்லியன் டொலர்களை கொண்டது எனவும், அதனால் 11 மில்லியன் சிறீலங்கா மக்கள் பயனடைவார்கள் எனவும், சிறீலங்கா மக்களின் காணிகள் அவர்களுக்கு சொந்தமாக வழங்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் பொருளாதாரமும், பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என அனைத்துலக நாணய நிதியத்தின் தொடர்பாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் தமது நிதி வழங்கல் தொடர்பில் புதிய நிபந்தனைகளை விதிப்பதற்கே காத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாம் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2015 ஆம் பெறப்பட்ட கடன்களின் விதிவிலக்கு காலம் 2025 ஆம் ஆண்டு நிறைவடைவதால் சிறீலங்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு 2 றில்லியன் ரூபாய்களாக இருந்த கடன் தொகை 2005 -2010 களில் ஏற்பட்ட போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அது 7 றில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது மகிந்தா அரசு 5 றில்லியன்களை கடனாக பெற்றுள்ளது.

எனினும் அதன் பின்னர் வந்த அரசு எந்த அபிவிருத்தியும் செய்யாத போதும், கடன்சுமை அதிகரித்து 13 றில்லியன்களாக தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதல் சிறீலங்காவின் பொருளதாரத்தை மேலும் சிதைத்துள்ளது, அதாவது இந்த தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இரண்டு மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதிக்கு இணையானது.

ஒருபுறம் பொருளாதார அழுத்தம், மறுபுறம் மேற்குலகத்தின் அரசியல் அழுத்தம் சிறீலங்கா இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த நெருக்கடிகளை ஏனைய இனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த என்ன நகர்வுகளை மேற்கொள்ளப்போகின்றன என்பது தான் தற்போது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version