Tamil News
Home செய்திகள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர்கள் உண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள்தானா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்குள்ளது என  இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மஹாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற கொள்ளையர்கள், வீட்டில் இருப்பவர்களுக்குத் தாம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்றும் கொரோனா ,பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் வீட்டிலிருந்தவர்களுக்கு மருந்துவில்லை ஒன்றை வழங்கி அதனை அருந்துமாறும் தெரிவித்துள்ளனர்.

மருந்தை அருந்தியவுடன் வீட்டார் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மயக்கமுற்ற வீட்டார் நேற்று வெள்ளிக் கிழமை காலையிலேயே மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியுள்ளனர் என குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குச் சுகாதார அதிகாரிகள் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்வதற்கு முன்னர் ஒருபோதும் மருந்து அருந்த வேண்டி தேவையில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்துள்ளார்.

அதனால் பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலைமையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடி நபர்கள் சமூகத்தில் இருப்பதினால் மக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version