சுகாதார செயலாளரின் முன்னெச்சரிக்கை கடிதம் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது  தொற்றுநோய் தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்கும் முயற்சியாகும் என  சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வெகுசன  ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும்  ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள் காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்கப்படும்  என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்பமிட்ட அச்சுறுத்தல் கடிதம், சகல சுகாதாரத் துறை நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோவிட்-19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள்  வெவ்வேறு  மூலாதாரங்களின் அடிப்படையில் தொற்று சம்பந்தமான உண்மைத் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகக் காணப்படும் வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி தகவல் உரிமையை  மீறும் குறித்த செயற்பாட்டை  சுதந்திர ஊடக இயக்கம் கண்டிப்பதுடன், தமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.