சீமான் ஏன் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்?

40 ஆயிரம் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல 650 தமிழக மீனவர்களைக் கொன்ற கோத்பாயா இந்தியா வந்திருக்கிறார்.ஈழத் தமிழர்களை கொன்றதை கேட்காவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை கொன்றதற்காவது ஒரு கண்டனத்தை தெரிவித்திருக்கலாம்.

ஆனால் இந்திய அரசு அவருக்கு செங்கள வரவேற்பு மட்டுமல்ல முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளித்துள்ளது.அதுமட்டுமல்ல கோத்தாவுக்கு 7000கோடி ரூபா உதவியும் இந்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இதே மோடியின் இந்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.உண்மையில் கொஞ்சமாவது அறிவு இருக்குமாயின் “எமது வரிப்பணத்தை எப்படி எம்மைக் கொன்றவனுக்கு வழங்க முடியும்?” என்று மோடியின் அரசைக் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் மோடியின் அரசின் இத் தமிழின விரோதமான செயற்பாட்டை விமர்சிக்காதவர்கள் சீமானை விமர்சிக்கிறார்கள்.பரவாயில்லை. இது தமிழ் நாட்டு அரசியல். எனவே தமது அரசியலுக்காக அவர்கள் தங்களுக்குள் விமர்சிக்கிறார்கள் என கொள்ளலாம்.

ஆனால் சில ஈழத் தமிழர்களும் சீமானை விமர்சிக்கிறார்களே? சீமான் அப்படி என்ன இந்திய அரசைவிட மோசமாக தமிழ் மக்களுக்கு தீங்கு இழைத்து விட்டார்?

அண்மையில் திருச்சி சிறப்புமுகாமில் 20 ஈழத் தமிழர்கள் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனே அதனைக் கண்டித்து முகாம் முற்றுகைப் போராட்டத்தை சீமான் கட்சியினரே செய்தனர். அது தவறா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான ராபேர்ட் பயஸ் என்பவர் ஈழத் தமிழர். அவருக்கு தமது வீட்டு முகவரி கொடுத்து 30 நாள் பரோல் வாங்கி தமது வீட்டில் தங்க வைத்து அவரின் மகள் திருமணம் நடக்க உதவி செய்பவர்கள் இதே சீமான் கட்சியினரே. அது தவறா?

ஒருபுறத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி இந்திய அரசு மேலும் ஜந்து வருடம் தடையை நீடிக்கும்போது மறுபுறத்தில் அவர்கள் எமது மாவீரர்கள் என்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பாடுகின்றனர் சீமான் கட்சியினர். இது தவறா?

ஈழத்தில் தமிழருக்கு நடந்த அவலங்களை தமிழகத்தில் கூறுகிறார். ஈழத்தில் தமிழருக்கு ஒரு தீங்கு நடந்தால் தமிழகத்தில் இருந்து வரும் முதல் குரலாக அவருடைய குரலே இன்று இருக்கிறது.

இதையெல்லாம் மறந்து அவர்களை விமர்சித்தால் அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி என்ன நினைப்பார்கள்?

சீமானை விமர்சிக்கக்கூடாது என்று கூறவில்லை. மாறாக சீமான்; மீதான விமர்சனம் என்பது அவர் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலை தோற்கடிக்க விரும்புவோருக்கு வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்றே கூறுகிறோம்.

நன்றி – தோழர் பாலன் (முகநூல்)