Tamil News
Home உலகச் செய்திகள் சீன படையினரின் தாக்குதலில் அதிகாரி உட்பட மூன்று இந்திய படையினர் பலி

சீன படையினரின் தாக்குதலில் அதிகாரி உட்பட மூன்று இந்திய படையினர் பலி

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய  தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்புக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் போல் சீன ராணுவத்துக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில் ஏற்கெனவே இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடைேய சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த மோதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த வாரம் சுமுக நிலை எட்டப்பட்டது. இந்தச் சூழலில் இந்திய வீரர்கள் 3 பேர் சீன வீரர்களால் கொல்லப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்குப் பதில் நடவடிக்கை ஏதும் வேண்டாம், அது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று சீன வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவனத்தின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன எல்லைக்குள் அத்துமீறிய அதிகாரிகளை இந்திய வீரர்கள் தாக்கியதாக சீன ராணுவம் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்

Exit mobile version