சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்

இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவினால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் செய்திப் பிரிவிகளும் உறுதிப்படுத்துகின்றன.

சூடானின் இறையாண்மை கவுன்சிலின் தலைவர் ஜெனரல் அப்துல் பத்தா அல்-புர்ஹான் செவ்வாய்க்கிழமை தலைநகர் கார்ட்டூமில் நடைபெற்ற அவரது உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் செயற்கைக்கோளை ஏவுவதாக அறிவித்தார்.

“இந்த செயற்கைக்கோள் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தரவைப் பெறுதல் மற்றும் நாட்டின் இராணுவத் தேவைகளுக்கான இயற்கை வளங்களை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (எஸ்.ஆர்.எஸ்.எஸ்-1) ஞாயிற்றுக் கிழமை வடக்கு சீன மாகாணமான ஷாங்க்சியில் இருந்து ஏவப்பட்டதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவும் தெரிவித்துள்ளது.

ஆளும் குழுவின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் அல்-ஃபாக்கி சுலைமான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் “சில மாதங்களில் சூடானிலிருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப்படும்” என்று கூறினார்.

“இந்த திட்டத்தில் ஒரு பங்காளியாக இருப்பதால், சீனா இந்த செயற்கைக்கோளை ஏவியது”  என்று அல்-ஃபாக்கி கூறினார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடும் சூடான், தொலைதூர உணர்திறன் மற்றும் புவி-தகவல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய விண்வெளித் திட்டத்தில் பல தசாப்தங்களாக ஈடுபட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் தலைமையிலான அப்போதைய சூடான் அரசாங்கம் விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி நிறுவனத்தை (இஸ்ரா) நிறுவியது.

அவரது 30ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்து அல் பஷீர் ஏப்ரல் மாதம் இராணுவத்தால் நீக்கப்பட்டார்.

வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை மற்றும் அதிக பணவிக்கத்தின் தலைமையிலான பொருளாதார நெருக்கடியால் போராட்டங்கள் தூண்டப்பட்டன.

இதற்கிடையில் இராணுவம் மற்றும் பொது மக்களுக்கான பயனுக்காக மேற்கூறிய செயற்கைக்கோள் ஏவுவதாக சூடான் கூறுகின்றது. வடசீன மாகாணமான ஷாங்க்சி நகரிலிருந்து இந்த செயற்கைக்கோள் ஞாயிற்றுக் கிழமை ஏவப்பட்டதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.