சீனாவில் ஊடகவியலாளர்கள் தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட தடை – LJF அமைப்பு கண்டனம்

ஊடகவியலாளர்கள் தணிக்கையின்றி தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட சீனா தடை விதித்ததிற்கு உலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு(LJF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘’பொது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட அனுமதிக்கும் ஊக்கமிகுந்த சமூகம் தான் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை” என்று அது தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய பத்திரிகை மற்றும் பதிப்பு அமைப்பு(NPPA) நடத்திய ஊடகவியலாளருக்கான  வருடாந்திர ஊடக தகுதிப்பாடு புதுப்பிப்பு (Press credentials renewal) நிகழ்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊடகவியலாளர்கள் தங்களின் பணி நிமித்தம் சேகரிக்கும் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பாளர்கள் விதிகளை மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாவதுடன், ஊடக தகுதிப்பாட்டை இழக்க நேரிடலாம். செய்தித்தாள், ஒலிபரப்பு நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி வலைத்தளங்கள் மற்றும் செய்தி தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த விதிகள் பொருந்தும்.

மேலும் பெப்ரவரி 22ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகள் பிரச்சினைக்குரிய ஆன்லைன் செயல்பாடுகளுக்கு பொதுகணக்குகளையும் சமூக வலைத்தள நிறுவனங்களையும் பொறுப்பாக்குவதுடன் முறையான கருத்து பரிமாற்றத்திற்கும் ஆரோக்கியமான மின்வெளிக்கும் இது உதவும் என்று மின்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மீதான சீன அரசின் பிடி இறுகி வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள(LIF)பொதுமக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதிப்பதுதான் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

Wechat weibo உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் எந்தவித கட்டுப்பாடுமின்றி செய்திகள் பதிவு செய்கின்றனர். அதன் மூலம்  அவை “மக்கள் ஊடகமாக” செயல்படும் போக்கு சமீப காலங்களில் சீனாவில் வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.