சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததை அவரின் குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது வரலாறு முழுவது கேட்டறிந்த அவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக கூட்டங்களை நடத்தினீர்களா? , தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ஏன் பங்குபற்றினீர்கள்? உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டீர்களா? எந்தெந்த ஊடகவியலாளர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள்? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு தலைமை காரியாலயத்துக்கு நாம் அழைக்கும் போது வரவேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தால்  பெரும் அச்சமும் அதிருப்தியும் அடைந்துள்ள சீலனும் அவரது குடும்பத்தினரும், இது எம்மை அச்சுறுத்தும் செயற்பாடு என நெரிவித்துள்ளதுடன், இதுவரை இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளையோ பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளையோ நான் மேற்கொண்டதில்லை பல காலமாக சிவில் சமூக செயற்பாட்டில் நான் ஈடுபட்டு வருகிறேன், தென்னிலங்கையில் உள்ள பல சமூக அமைப்புக்களில் அங்கம் வகித்தும் வருகிறேன், சமீப காலமாக தான் இவ்வாறன விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருகிறேன்.

அரசு புதிதாக எம்மைப்போன்ற சமூக செயற்பாட்டாளரகளை குறிவைத்துள்ளது, எம்மை சுதந்திரமாக செயற்பட விடாமல் அச்சநிலைக்குள் தள்ளும் செயற்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.