சிறீலங்கா விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதிக்கப்படும் – நோர்வே

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியிருந்தாலும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படும் என சிறீலங்காவுக்கான நோர்வே தூதுவர் றினி ஜொரான்லி எகெடல்(Joranli Eskedal )தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த தீர்மானம் தொடர்பான இணைத்தலைமை நாடுகள் குழுவில் நோர்வே அங்கம் வகிக்கவில்லை. நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கவுமில்லை. ஆனாலும் சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இது தொடர்பான விவகாரங்கள் வரும்போது தாம் எமது கருத்துக்களை கூற தயங்கமாட்டோம்.

இந்த விவகாரத்தில் இணைந்து பணியாற்ற நாம் எமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம். சிறீலங்கா அரசு இந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறினாலும் எதிர்வரும் மார்ச் மாதம் அது விவாதத்திற்கு வரும்போது சிறீலங்கா அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என்பதை நாம் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளோம். இந்த விவகாரத்தில் சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு என்ன பதிலை வழங்கப்போகின்றது என்பதை நாம் எதிர்பார்ப்பதுடன், சிறீலங்கா அரசுடன் இது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொள்ளவும் ஆர்மாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.