சிறீலங்கா தொடர்பாக இதுவரை நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயங்கள்-விராஜ் மென்டிஸ்

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக, போர்க்குற்றத் தீர்ப்பாயத்தை முன்னெடுப்பது என்ற எண்ணத்தின் ஆரம்பப்புள்ளி, ஜேர்மனியின் பிரேமன் (Bremen) நகரத்தில், 2009 ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இடப்பட்டது. அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த மிகவும் கொடூரமான இனவழிப்பை எதிர்கொள்வதற்காக சிறீலங்காவின் அமைதிக்கான அயர்லாந்து ஆர்வலர்கள் குழாமைச் சேர்நதவர்கள் (Irish Forum for Peace in Sri Lanka), பிரேமன் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பைச் (International Human Righrs Association in Bremen) சார்ந்த ஆர்வலர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு பின்புலத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கென, தமிழ் மக்களது போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியதன் காரணத்தினால், இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட, சிங்கள இனத்தைச் சார்ந்த செயற்பாட்டாளர்களும், புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திலிருந்தும் அயர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் வந்திருந்த செயற்பாட்டாளர்களும் ஒன்றாகச் சந்தித்தார்கள். பன்னாட்டு சமூகத்தின் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நடைபெற்று முடிந்த நிகழ்வுகளைக் கண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்ததை நாம் உணர்ந்து கொண்டோம்.

மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பாக உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அமைதி காத்தன. எட்டு மாதங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில், தமிழர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எவையுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், இந்த இனவழிப்புப் போரின் எதார்த்தத் தன்மையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் திடசங்கற்பம் பூண்டோம்.

தமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மோசமான படுகொலையைக் கண்டும், எந்தவித கவலையையும் தெரிவிக்காது, முழு மனித குலமுமே தம்மைத் தனியே விட்டுவிட்டதாக, இன்னொரு வகையில் சொல்லப்போனால் தாம் மனித குலத்தின் ஓர் பகுதியேயல்ல என்பது போல்  நடத்தப்பட்டதாக, தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழ்ந்த ஈழத்தமிழ் மக்கள் உணர்ந்ததை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கலந்துரையாடல்கள் மூலமாக நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

அதே வேளையில், மனித குலத்தின் இன்னொரு பகுதி, அது ஒரு சிறிய குழுவாக இருந்தால் கூட, உண்மையில் ‘பாரிய அநீதி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராக இருக்கின்றது என்ற செய்தியை நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களுக்கும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் சொல்ல வேண்டும் என நாம் சிந்தித்தோம்.

அந்த வகையில், புலம்பெயர்நத ஈழத்தமிழ் மக்கள் சமூகத்துக்கு முற்றிலும் வெளியே இருந்து, இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். சிங்கள இனத்தவர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. உரோம் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தைத் (Permanent People’s Tribunal – PPT) தொடர்பு கொள்வதே இவ்விடயத்தில் சிறந்த முன்னெடுப்பாக இருக்கும் என்று முனைவர் அன்டி ஹிகின்பொட்டம் (Dr. Andy Higginbottom) எமக்குச் சுட்டிக்காட்டினார்.

வியட்நாமில் முன்னெடுக்கப்பட்ட ‘ரஸல்- சாத்ர’ (Russell/Sartre) தீர்ப்பாயத்தின் பாரம்பரியத்தின் வழியில், தொடர்ந்து செயற்படும் இத்தீர்ப்பாயம், உலக அதிகார சக்திகளின் செல்வாக்குக்கு அப்பாற்பட்டது என்றும், அதேநேரம், அறநெறிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளவல்லது என்றும் முனைவர் ஹிகின்பொட்டம் வாதிட்டார். நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்சுவா ஹ_ட்டாட் (Professor Francois Houtart) என்பவரை நாம் சந்திப்பதற்கான ஒழுங்குகளை இலங்கை சமாதானத்துக்கான அயர்லாந்து மன்றத்தைச் சேர்ந்த முனைவர் ஜூட் லால் பெர்னாண்டோ செய்து தர, பேராசிரியர் ஹ_ட்டாட், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் மைய ஏற்பாட்டாளரைச் சந்திக்க எமக்கான ஒழுங்குகளைச் செய்து தந்தார்.

இந்த செயன்முறைக்கு எம்மை இட்டுச்சென்ற, ஒரு மிக ஆழமான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக, முனைவர் ஜான்னி தொஞ்ஞோனியைச் (Dr.Gianni Tognoni) சந்திக்கும் நோக்குடன், நானும் அஜித் ஹேரத்தும் (Ajith Herath) மிலான் நகரத்துக்குச் சென்றோம். நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான நம்பகமான சூழலை இலங்கை சமாதானத்துக்கான அயர்லாந்து மன்றமும், பிரேமன் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து மேற்கொண்டன. சிறீலங்காவுக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வுக்கு வேண்டிய நிதியும், வளங்களும் தமிழர் அல்லாத அமைப்புகளிடமிருந்தே வரவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நடைமுறை உறுப்பினராக அயர்லாந்து இருந்ததனாலும், ஆரம்பத்தில் சிறீலங்காவில் சமாதானத்தை அது ஊக்குவித்ததாலும், காலனீயத்துக்கு எதிரான வரலாற்றை அது கொண்டிருந்ததன் காரணத்தினாலும் அதன் தலைநகரான டப்ளின் நகரத்தில் (Dublin) தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு நடைபெற்றது.

தீர்ப்பாயத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொறுப்பை முனைவர் ஜூட் லாலும் இலங்கை சமாதானத்துக்கான அயர்லாந்து மன்றமும் மேற்கொள்ள, அதற்குத் தேவையான கணிசமான அளவு ஆவணங்களை தயார் செய்யும் பொறுப்பை, பிரேமனைச் சேர்ந்த நாங்கள் எடுத்துக் கொண்டோம். இனப்படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானத்தை, தீர்ப்பாயத்தில் உள்ள நடுவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குப் போதியளவு ஆதாரங்கள் அந்த நேரத்தில் (2010)இல் எம்மிடம் இருக்காதபடியால், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் வழிகாட்டலில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டை முன்வைப்பதை நாங்கள் தவிர்த்திருந்தோம். ஆகவே ‘போர்க்குற்றங்களும்’, ‘மனித குலத்துக்கெதிரான குற்றங்களும்’ இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதோடு, நாங்கள் நிறுத்திக் கொண்டோம். இருப்பினும், இனவழிப்பிலிருந்து உயிர் தப்பியவர்களிடமிருந்தும், ‘இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்’ என்ற அமைப்பிடமிருந்தும் இரண்டாவது அமர்வுக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவது என்பதையும் உறுதி செய்தோம்.

பிரேமனில் 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில், இனவழிப்பு
நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைத்ததோடு, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தோம்.

பாஷனா (Bashana), அஜித், ஷிரோமன், நிக்கோ, பில் (Phil) ஆகிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் மிகக் கடுமையான உழைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆவணங்கள், போரிலே உயிர் பிழைத்தவர்களால் கொடுக்கப்பட்ட மிகவும் வலுவான சான்றுகள், அன்டி ஹிகின்பொட்டம் மற்றும் கரன் பாக்கர் (Karen Parker) ஆகிய இருவரும் முன்வைத்த மிகச் சிறப்பான வழக்கு வாதங்கள் போன்றவற்றின் காரணமாக, ‘உண்மையில் இனவழிப்பு நடைபெற்றிருக்கிறது’ என்ற முடிவை மேற்படி தீர்ப்பாயம் மேற்கொண்டதுடன்; அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் இனவழிப்புக்குத் துணைபோயிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க இன்னும் அதிகமான சான்றுகள் தேவை என்ற தீர்மானத்தையும் தீர்ப்பாயம் மேற்கொண்டது.

ஆனால் இவ்வளவு செயற்பாடுகளுக்குப் பின்னரும், இனவழிப்பு நடைபெற்றது என்பதை பன்னாட்டுச் சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. மியன்மார் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விடயத்தை  பன்னாட்டுச் சமூகத்தின் பெரும்பகுதி ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், ஈழத்தமிழ் மக்கள் மீது இனவழிப்பு நடைபெற்றது என்பதை பன்னாட்டுச் சமூகம் இன்னும் என்ன காரணத்தினால் ஏற்க முன்வரவில்லை என்னும் வினாவை புலம்பெயர் தமிழர்கள் எழுப்ப வேண்டும்.

பன்னாட்டுச் சமூகம் இனவழிப்பை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு அரசியல் விடயம் என்பதை புலம்பெயர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதே பன்னாட்டுச் சக்திகளே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் காரணமாயிருந்தன என்பதையும் தமிழ் மக்கள் சார்பில் இனவழிப்புக்கு எதிராகப் போரிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தின என்பதோடு, மக்களை அழிப்பதற்கான ஒரு போரை முன்னெடுக்க சீறிலங்கா அரசுக்கு முற்றுமுழுதான உதவிகளையும் வழங்கின என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இப்படியாகச் செயற்பட்ட பன்னாட்டுச் சக்திகள் தாமே ஆரம்பித்த ஒரு போர், இனவழிப்புக்கு இட்டுச் சென்றது என்ற விடயத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்புக் கூட்டில் தம்மைக் கறைப்படுத்திக் கொள்ளாத சக்திகளை இனங்கண்டு, அவற்றின் துணையுடன் ஈழத்தமிழ் மக்கள் மீது இன்றும் தொடருகின்ற இனவழிப்பைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் தமிழ்மக்கள் விரைவாக முன்வரவேண்டும்.

(தற்போது ஜேர்மனியில் வதியும் சிங்கள இனத்தவரான விராஜ் மென்டிஸ், ஒரு ஊடகவியலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்பது மட்டுமன்றி தீர்ப்பாயங்களை முன்னெடுப்பதில் மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழில்: ஜெயந்திரன்