Tamil News
Home செய்திகள் சிறீலங்கா தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்தும்- சீனா

சிறீலங்கா தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்தும்- சீனா

சிறீலங்கா தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்தும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் நடைபெற்ற சிறீலங்கா தொடர்பான நாடு சார்ந்த தீர்மானம் குறித்த கலந்துரையாடலின்போது சிறீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து சில மேற்கத்திய நாடுகள் கேள்வி எழுப்பின.

இவ்விடயம் தொடர்பிலேயே சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு நட்பு நாடாக இலங்கை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தும். மேலும் தேசிய வளர்ச்சியில் அதிக சாதனைகளை இலங்கை செய்யும் என்றும் சீனா நம்புகிறது.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை சீனா பாராட்டுகிறது.

இதேவேளை அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கின்றது. அனைத்து நாடுகளும் ஐ.நா.சபையின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்.

மேலும், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் நகர்வுகளை நிராகரித்து அரசியல் அழுத்தத்தை செலுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஊடாக மனித உரிமைத்துறையில் உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.

Exit mobile version