Tamil News
Home செய்திகள் சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் எமக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதன் முழு விபரம் வருமாறு:

கேள்வி- நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்?

வடக்கு கிழக்குடன் மலையகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தி மீண்டும் போடப்படுகின்றது. இந்நிலையில் அன்றாட கூலித் தொழிலாளிகள், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கின்ற மக்களிடம் காசும் இல்லை. அவர்களின் கைகளில் பொருட்களும் இல்லை.

எங்கோ கோரோனா தொடங்கும் போது,இங்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் வரும் என அரசிற்கு தெரிந்திருந்தால் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஒழுங்குபடுத்திய பின்னர் இந்த ஊரடங்குச் சட்டத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப் படுத்தியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இருபத்தியொரு நாட்களாக இந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக இருக்கின்றது.

கொரோனா அல்லாது ஏனைய நோயால் பாதிக்கப்பட்டு கிளினிக் செல்ல முடியாது மருந்துகளை பாவித்துக் கொண்டிருக்கும் நிலை மக்களிடம் இருக்கின்றது. கொரோனா நோய்க்கு வெளிநாட்டினரது வருகையும் ஒரு காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் கொரோனா நோய்த் தொற்றால் ஒருவரும் இனங்காணப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பிரஜையால் பரப்பப்பட்டது எனப் பார்க்கின்றோம்.

அரசாங்கத்தில் வறுமையானவர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி உதவிகூட சீராக மக்களுக்கு சென்றடையவில்லை என்பது ஒரு வருத்தம். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், அன்றாடம் உழைத்து வாழும் மக்கள், மாற்றுத் திறனாளிகள், காணாமல் போனோர் குடும்பம், அரசியல் கைதிகள் குடும்பம் உட்பட மொத்தக் குடும்பமும் போரிலிருந்து மீளாத வறுமையிலேயே உள்ளனர்.

ஏனெனில் நிலையான வாழ்வாதார உதவித் திட்டங்களை அரசாங்கம் அங்கு மேற்கொள்ளவில்லை. அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு திட்டங்களை முன்னெடுத்ததே அன்றி கடந்த பத்து வருடங்களாகியும் நிலையான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்கவில்லை.

சில விவசாயிகள் இருக்கும் நெல்லை வைத்து கஞ்சி குடிக்கக்கூடிய வசதியுடன் இருந்தாலும்,ஏனைய மக்களுக்கு கடினமாகவே உள்ளது. புலம்பெயர் மக்களும் குறுகிய ஒரு கொடுப்பனவுடன் வாழும் நிலையில் இருப்பதால்,அவர்கள்கூட இங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூழல் இல்லை. காசு அனுப்புவதற்கான வழிமுறைகளும் அங்கு இல்லை. இன்று கூடுதலான மக்களின் வாழ்வாதாரம் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பிலேயே பெரிதும் தங்கியுள்ளது .

இன்று வடக்கு நிலைமையைப் பார்த்தால், தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள், இளைஞர் அமைப்புகள்,நிறுவனங்கள்,சில அரசியல்வாதிகள் ஆகியோரே உதவி செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு நெருக்கடி நிலை வரும் போது அரசாங்கமே அந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.

எந்தெந்த பிரதேசங்களுக்கு உதவித் திட்டங்கள் செல்லவில்லை என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அரசாங்கமே கிராம மட்ட பொறிமுறை ஊடாக இந்த உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லும் போது தொடர்ச்சியான ஊரடங்கை மேற்கொள்வதும் விமர்சிக்கப்படக்கூடிய விடயமாகும்.

கேள்வி-தற்போது தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த பல தமிழ்க் கட்சியினர் இருக்கின்றனர். இப்படி பல கட்சியினர் இருப்பதால், தமிழ் மக்களுக்கு அல்லது தமிழ் வேட்பாளர்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படுகின்றது?

பல கட்சிகள் வந்தாலும்,எந்தக் கட்சிகள் எந்த செயற்பாட்டை முன்னெடுக்கப் போகின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு வந்து விட்டது. எமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது. தமது வாக்குகள் சிதறடிக்கப்படாத ஒரு தெரிவை மக்கள் எடுப்பார்கள்.

கடந்த காலங்களில் என்ன செய்வதென்று அறியாமல் கண்மூடித்தனமாக கூட்டமைப்பை ஆதரித்துச் சென்ற நிலைமை தற்போது இல்லை. தற்போது புதிதாக வாக்காளர்களாக இருக்கும் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் மிகவும் தெளிவான சிந்தனை உள்ளது. எனவே வெற்றி பெறுபவர்களுக்கு வாக்குகளை அவர்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

செல்லுபடியற்ற வாக்குகள் எங்களின் ஓரிரு ஆசனங்களை இல்லாது செய்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் மக்கள் எந்த வேட்பாளர் மக்களுக்கு ஆதரவாக, விலைபோகாது நிற்பார்கள் என்று தெரிவு செய்து அவர்களை ஆதரிப்பார்கள்.

கேள்வி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எவ்வாறான தவறுவளை விட்டிருக்கின்றது. அதனை உங்களின் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது? புதிதாக ஏதாவது தீர்மானங்கள், திட்டங்கள் உங்களிடம் உள்ளதா?

நாங்கள் வடக்கில் இன அழிப்பு பிரேரணையை கொண்டு வரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சி முழுமையாக தனது எதிர்ப்பை வெளியிட்டது மட்டுமல்ல, இன அழிப்பு நடந்தது அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என நாங்கள் எழுப்பிய தீர்மானம் தான் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தது.

அது நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை கொண்டு வந்தது. மக்களின் தேவைகளை வடக்கில் நாங்கள் செய்ய முடியாது ஆளும் தரப்பிற்குள்ளேயே எதிர்த்தரப்பு ஒன்றை தமிழரசுக் கட்சி உருவாக்கியது. தங்களின் சொந்த பிரதிநிதிகளுக்கே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தது.

இதைவிட ஐ.நா. சபையில் இரண்டு வருடகால நீடிப்பு வழங்க வேண்டும் என்று அரசிற்கு ஆதரவு தெரிவித்ததும் இதே தமிழரசுக் கட்சியும் இந்தக் கூட்டமைப்பும் தான். மக்களின் விருப்பங்கள் ஒன்றாக இருந்த போது தேர்தல் காலத்தில் அவர்களிடம் ஆணையைப் பெற்றது, விஞ்ஞாபனம் ஒன்றாகவும் நடவடிக்கை வேறாகவும் அமைந்தது. குழப்பமான காலகட்டத்தில் இவர்கள் ஐ.தே.க. க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது அவர்களின் சுயநல அரசியல் இலாபமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காது, பல்கலைக்கழக மாணவர்களின் 13 அம்சக் கோரிக்கையைக்கூட செல்லுபடியற்றதாக்கி பல்கலைக்கழக மாணவர்களையும் புத்திஜீவிகளையும் உதாசீனப்படுத்தியது.

மேலும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். மேலும் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டு, பிரபாகரனின் படத்தை தாங்கி வாக்கு கேட்டுவிட்டு, இப்போது விடுதலைப் புலிகள் தங்களுக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று கூறி கைதான அப்பாவி இளைஞர்களையும் நாங்கள் பார்க்கின்றோம்.

இவர்கள் மீண்டும் தேர்தல் வரும் போது இதையே மீண்டும் செய்யும் ஒரு போலி அரசியலை நாங்கள் கண்டிருக்கின்றோம்.இவர்கள் விட்ட குறைகளை நாங்கள் விடக்கூடாது என்ற தெளிவுடன் இருக்கின்றோம். நாங்கள் மக்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அதையே மேற்கொள்ளும் அரசியலை நாங்கள் செய்யவுள்ளோம்.

கேள்விஅண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நீங்கள் கலந்து கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக என்ன கருத்துக்களைக் கூற விரும்புகின்றீரகள்?

ஐ.நா. கூட்டத்தொடருக்கு சென்றிருந்த போது ஐ.நா. சபையில் சில தனிப்பட்ட சந்திப்புகளை நான் ஒழுங்குபடுத்தியிருந்தேன். ஆனால் வழமையாக நாங்கள் பேசும் இடத்தில் மோசமான சக்திகளின் தலையீடு காரணமாக நான் பேச அனுமதிக்கவில்லை. அந்த சக்திகளை நான் மிகவும் ஆபத்தானதாக பார்க்கின்றேன்.

அது தனி நபராக இருக்கலாம் அல்லது அமைப்பாக இருக்கலாம். அதை இனங்காண முடியவில்லை. இதனால் நான் ஐ.நா. சபையில் பேசவில்லை. அரசியல் தளத்தில் மற்றும் மனித உரிமைகள் தளத்திலிருந்து என்னை நீக்க பல சதி வேலைகள் நடைபெறுகின்றது என்பதை நான் பின்னர் அறிந்தேன்.ஆனால் எனது பணி தொடரும். எனது கணவனை என் கையால் கொடுத்து விட்டு தேடும் நான் இந்த எல்லா பணியிலும் தோற்றும் ஒருவராக இருக்கின்றேன். நான் ஒரு உயிர் வாழும் சாட்சியம்.

Exit mobile version