Tamil News
Home செய்திகள் சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : வி.உருத்திரகுமாரன்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : வி.உருத்திரகுமாரன்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஆணையாளர் அவர்கள் முன்வைக்கவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோளொன்றினை அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகளை ஊக்கி வளர்த்தல் ஆகியவன்றை அடிப்படையாக கொண்டு, கொண்டுவரப்பட்ட ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தின் நிலைமாறுகால நீதிக்கான முன்முயற்சி காலவாதியாகி விட்டபடியால், அதற்கு உயிரூட்டும் முயற்சியைக் கைவிட்ட, அதற்கு மாறாக ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றை கைக்கொள்ளும்படியும் அனைத்துலக சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவதும்,
இனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உட்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு அனுப்புவதும், ஈடுசெய் நீதிச் செயல்நிரலாக அமைய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தின்படி தனக்குள்ள நிலைமாற்ற நீதிக் கடப்பாடுகளை வேண்டுமென்றே சிறிலங்கா நான்காண்டு காலத்தை நிறைவேற்றத் தவறியயிருந்த நிலையில், மனிதவுரிமைப் பேரவை சென்ற ஆண்டு அமர்விலேயே சிறிலங்கா தொடர்பான தன் வழியை மாற்றிக் கொண்டு, ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மாறாக அத்தீர்மானத்துக்குக் கெடுமாற்றம் தந்து தள்ளிப்போட முடிவு செய்ததன் விளைவாக, சிறிலங்காவின் தண்டனை விலக்கிய குற்றப் பண்பாடு மேலும் ஊன்றி வலுப்பட்டதோடு, ஆய்த மோதலின் போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பெரிதும் பொறுப்பானவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டுவிட்டது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நிலைமாறுகால நீதிப்பற்றுதல் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை நோக்கி நகர்த்துவதற்குப் பதில் அவற்றிலிருந்து அது விலகிச் செல்வதற்கே அது முடிவில், வழிகோலிற்று எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஐ.நா 30/1தீர்மானத்திலிருந்து சிறிலங்கா ஒருதரப்பாக விலகிக் கொள்வது மனிதவுரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் தெளிவாக மறுதலிப்பதே ஆகும் எனத் தெரிவித்துள்ளதோடு, ஐநாவின் சக உறுப்பரசுகளை அது துச்சமாக மதிப்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்தக் கட்டத்தில் நிலைமாற்ற நீதி பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. சரியாகச் சொன்னால் ஈடுசெய் நீதியே இன்றையத் தேவையாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2015 தேர்தலில் இராசபட்சே தோற்று, சிறிசேனா அதிகாரத்துக்கு வந்த போது, சர்வதேச சமுதாயம் இந்த ஆட்சி மாற்றத்தை நிலைமாறுகால நீதி அடைவதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்த்தது. ஆனால் உண்மை வேறுவிதமாக இருப்பதை கடந்த ஐந்து ஆண்டுக் காலம் காட்டி விட்டது. பார்க்கப் போனால், சிறிசேனா அரசு நிலைமாற்ற நீதியை தண்டனை விலக்கிய குற்றத்தின் நவீன வடிவமாகப் பயன்படுத்திக் கொண்டது. காணாமற்போனவர்களில் பெரும்பாலார் இறந்து விட்டார்கள் என்று சிறிலங்காவின் தலைமையமைச்சர் விக்கிரசிங்கே அறிவித்து விட்ட நிலையில் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது என்பது சிறிலங்கா அரசு ஐநா மனிதவுரிமைப் பேரவையையும் பரந்த சர்வதேச சமுதாயத்தையும் ஏமாற்றுவதற்கே நிலைமாறுநீதியைப் பயன்படுத்திக் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

நிலைமாறுகால நீதிக்கான முன்னிபந்தனைகளில் ஒன்று: சம்பந்தப்பட்ட தரப்பு தான் இழைத்த மீறல்களை ஏற்றுக்கொள்வதாகும். ஆனால் மீறல்கள் நடந்தன என்பது சிறிலங்காவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. சொல்லப்போனால் திரும்பத்திரும்ப நாம் கண்டது மறுப்புகளும் வெற்றி மமதையுமே ஆகும்.

அரசே மோசமான குற்றங்கள் புரிந்து, குற்றங்களுக்கு இரையானவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் சார்ந்த குழுவுக்கு எதிராக – சிறிலங்காவைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எதிராக – பரவலான நிறுவனவகைப் பாகுபாட்டின் சிற்பியும் கங்காணியுமாக இருக்கும் போது, பொறுப்புக் கூறல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயல்வழிகளில் அரசே தொடர்புடையதாக இருக்கும் வரை துயரப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியே இல்லை என்பதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப நமக்குக் காட்டியுள்ளது.

இராசபட்சேக்கள் சென்ற ஆண்டு அதிகாரத்துக்கு மீண்டிருப்பதும் அது முதல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் தமிழர்கள் சிறிலங்காவில் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் வாழ முடியவே முடியாது என்பதைக் காட்டுகின்றன. இராசபட்சே சிங்கள வாக்குகளைக் கொண்டு பெற்ற வெற்றி சிறிலங்கா வளைந்து கொடுக்காத இனநாயக சிங்கள பௌத்த அரசு என்பதையும் அதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமே இல்லை எனப்தையும் காட்டும். சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தீர்வு முயற்சியிலும் ஈடுபட மாட்டேன் என்று அதிபர் கூறியிருப்பது இதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் போர்வையில் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையே தவிர வேறன்று.

மேலும், 2020 பிப்ரவரி 4ஆம் நாள் சிறிலஙகாவின் அதிகாரபூர்வ சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பது தமிழர்களுக்கு எதிரான பகைச் செயலும், மீளிணக்கத்தில் அரசுக்கு ஆர்வமில்லை எனக் காட்டும் அழுத்தமான அடையாளமும் ஆகும். நீதியும் மீளிணக்கமும் நிலைமாற்று நீதியின் இரட்டைத் தூண்கள். சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கு இடமே இல்லை என்பதாகும்.

தமிழ் மக்களின் இருப்பையே இல்லாதழிக்க பாரிய மனிதஉரிமை மீறலைச் செய்தவர் இப்போது சிறிலங்காவின் அதிபராக இருக்க, அரசுத் தலைவருக்குரிய சட்டக்காப்பை ஊடுருவி அதிபர் இராசபட்சேயை நீதியின்முன் நிறுத்தும் திறங்கொண்ட ஒரே மன்றம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமே. தமிழர் இனவழிப்புக்குப் பெரிதும் பொறுப்பான ஏனைய உயர்நிலை சிறிலங்க அரசதிகாரிகள் மீதும் படையதிகாரிகள் மீதும் வழக்குத் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே மன்றமும் அனைத்துலக்க் குற்றவியல் நீதிமன்றமே. ஆகவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப்பி வைக்குமாறு ஐநாவைக் கேட்டுக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இக்கோரிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா தொடர்பான 2012 ஐநா உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) கூறியுள்ள படி, போரின் இறுதி மாதங்களில் இப்போதைய அதிபர் கோத்தபய இராசபட்சே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, சிறிலங்கா இராணுவம் 70.000 தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது. 2016இல் வலுக்கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு அறிக்கையிட்டுள்ள படி, அதன் முன்னுள்ள காணாமற்போதல் வழக்குகளில் இரண்டாம் பெரிய தொகை சிறிலங்காவுக்குரியதாகும். காணாமற்போன ஆயிரக்கணக்கான தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளும் போது, உயிரிழந்த தமிழர் தொகை போர் முடிவில் 100,000க்கு மேல் வரும்.

2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் கூட்டு முன்மொழிவாக மனிதவுரிமைப் பேரவையால் ஒருமனதாக இயற்றப்பட்ட 30/1 தீர்மானம் சிறிலங்காவைச் சில உறுதிப்பாடுகளுக்கு ஒப்புக்கொடுக்கச் செய்துள்ளது; இதன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுக்காலப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்திட அயல்நாட்டு நீதியர்களும் சட்டத்தரணிகளும் அடங்கலான நீதிப் பொறிமுறையை நிறுவவும், நிலைமாற்ற நீதி வழிமுறைகளில் ஒன்றாக உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்கவும் சிறிலங்கா உறுதியளித்தது.

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்கா தொடர்பில் மிக அண்மையில் தந்த அறிக்கை இந்த வாரம் முன்னதாக வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் அவர் கூறியிருப்பது சிறிலங்காவின் ஏமாற்றுத்தனத்தை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. 2015 முதற்கொண்டு ‘கடந்த கால மீற்ல்களுக்குப் பொறுப்பான தனியாட்களை அகற்றவும், சித்திரவதைக்கும் வலுக்கட்டாயக் காணாமற்செய்தல்களுக்கும், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட சாகடித்தல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் கலைக்கவும், இக்குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்கிறார் உயராணையர். அதாவது தீர்மானத்தின் செயலாக்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், அப்பேரவையின் நிலைமாற்ற நீதி முயற்சி தோற்று விட்டது என்று பொருள்.

உயராணையர் பசேல் தன் அறிக்கையில் மேலும் சொல்கிறார்: ‘ஏற்கெனவே மனிதவுரிமைப் பேரவைக்கு உயராணையர் அளித்த அறிக்கைகளில் வெளிச்சமிட்டுக் காட்டிய நெடுங்காலத்திய அடையாளக்காட்டான வழக்குகளில் புலனாய்வு செய்வதிலும் சிறிலங்காவின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதிலும் சொற்ப முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது…. இந்த வழக்குகளில் முன்னேற்றம் இல்லை என்பது குற்ற நீதியமைப்பில் பொறுப்புக்கூறலுக்கு அமைப்புசார் தடைகள் இருப்பதையே துலக்கமாக வெளிப்படுத்துகிறது.’ அதாவது பன்னாட்டு மனிதவுரிமைச் சட்டங்களையும் பன்னாட்டு மாந்தநேயச் சட்டங்களையும் மீறிய கொடுங்குற்றங்களுக்காக அரசு அலுவலர்களைப் பொறுப்பாக்க சிறிலங்காவுக்கு விருப்பமும் இல்லை, திறனும் இல்லை. இதற்குத் தலையாய காரணம் அரசே இந்தக் கொடுங்குற்றங்களைச் செய்தது என்பதே. விருப்பமின்மையும் திறனின்மையும் சேர்ந்து கொள்ளும் போது சரியாக இந்தச் சேர்க்கையைக் கவனித்து வெற்றி கொள்ளத்தான் பொதுவாக ஈடுசெய்நீதியும் குறிப்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமும் வடிவமைக்கப்பட்டன.

உயராணையர் தமது மிக அண்மைய அறிக்கையில் கூறியிருப்பது போல், தண்டனை விலக்கிய குற்றநிலை தொடர்வது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஆட்சியாளர்கள் ‘கடந்த காலத்தை முழுமையாகக் கையாளத் தவறுவதால் வன்முறையும் மனிதவுரிமை மீறல்களுமான சுழல் திடும்பத் திரும்ப இடம்பெறும் ஆபத்துள்ளது.’ இதற்கு சென்ற ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையையே சான்றாகக் காட்டலாம்.

சிறிலங்க உள்நாட்டுப் போரின் முடிவு தொடர்பான மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களுக்கு அறிவுரைத்த சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பான மூவல்லுநர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஸ்டீபன் ராட்னர் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இண்டர்நேசனல் லா என்ற ஏட்டில் எழுதியுள்ளார்: ‘சட்டத்துக்கும் நட்த்தைக்கும் இடையே பாலம் அமைப்பதில் மூன்று தெளிவான தடைகள் இருப்பதையும் சிறிலங்காவின் நேர்வு காட்டுகிறது.

முதலாவதாக, மனிதவுரிமை மீறிய கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான சட்டத்தில் பெரும்பகுதி இப்போதைய ஆட்சியாளர்கள் முன்சென்ற ஆட்சியாளர்களைப் பற்றித் தீர்ப்புரைக்கும்படியான நிலைமைகளில் – அதாவது உண்மையான நிலைமாற்ற நீதி நேர்வுகளில் – உருவாகியிருப்பதாகும்.

நிலைமாற்றமல்லாத நிலைமைகளில் பொறுப்புக்கூறலுக்கான தடைகள் பெரிதும் பெருகி விடுகின்றன. ஏனென்றால் தலைவர்கள் இன்னுமதிகமாகப் பணயம் வைக்க வேண்டியதாகிறது: முழுப் புலனாய்வு என்பது சொத்துகள் முடக்கப்படுவதற்கும் பொதுவெளியில் அவமானப்படுவதற்கும், ஏன், உள்நாட்டு, அயல்நாட்டு அல்லது பன்னாட்டுத் நீதிமன்றத்தில் உசாவப்படுவதற்கும் (வழக்குவிசாரணை செய்யப்படுவதற்கும்) கூட வழிகோலக் கூடும்.

இன்னமும் கூட அரசாங்க அலுவலர்கள் தங்களைத் தாங்களே புலனாய்வு செய்து கொள்ள விரும்புவதில்லை என்பதே நிலைமாறுகால நீதிக்கு வரம்பிடும் கொள்கையாக உள்ளது.

தோற்ற தரப்பின் சட்ட மீறல்களைப் புலனாய்வு செய்யவே அந்த அரசுகள் விரும்பக்கூடும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா இப்படிச் செய்ய விரும்பலாம்…. ஆனால் இத்தகைய புலனாய்வுகள் வெற்றியாளரின் நீதியாக மட்டுமே தெரியும்.’

இராசபட்சே அதிபராக இருந்த வேளை, 2010இல் பாதுகாப்புச் செயலராக இருக்கும் போதே பிபிசிக்கு அளித்த பேட்டியில் சிறிலங்கா இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்த ஒரே ஒரு நேர்வு கூட இல்லை’ என்று அந்தச் செய்தியாளரிடம் கூறினார். 2012 பிபிசி பேட்டியில் அரசுப்படைகள் மக்களைக் காணாமற்செய்தல் பற்றிக் கேட்ட போது, கோத்தபயா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விட்டுச் சொன்னார்: ‘நான் பாதுகாப்புச் செயலர். இது குறித்துப் புலனாய்வு செய்து விட்டேன். இந்த ஆட்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளாமல் நான் சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள்.’ இதற்கு முற்றிலும் முரணாகத்தான் அண்மையில் அவர் ‘காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள்’ என்று சொல்லியுள்ளார்.

காணாமற்போனவர்கள் உண்மையில் இறந்து விட்டார்கள் என்றும், இறந்தவர்களைத் தன்னால் மீட்டுக் கொண்டுவர முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருப்பதை உயராணையர் குறைத்துக் காட்டினார் என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். ஐநா மனிதவுரிமைப் பேரவையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அதிபர் இராசபட்சே முன்னுக்குப் பின் முரணான தன் அறிவிப்புகளை இணக்கப்படுத்திக் காட்ட வேண்டும் என்றும், தன்னிடமிருக்கும் எல்லாத் தகவல்கலையும் சிறிலங்கா தகவலுரிமைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட சிறிலங்கா தகவலுரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும், தெரிந்து கொள்ளும் உரிமை, உண்மையறியும் உரிமை ஆகிய பன்னாட்டுக் கொள்கைகளுக்கு இணங்க ஐநாவிடமும் ஒப்படைக்க வேண்டும்.

மாறாக, உயராணையர் பசலே தமது மிக அண்மைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்: ‘கடந்த காலத்தைக் கையாள்வதை விட வளர்ச்சிக்கே அரசு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது. 2030ஆம் ஆண்டின் செயல்நிரலில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 16இன் படி ‘அமைதியான, அனைவருக்குமான சமூகங்களை ஊக்குவிப்பதும், அனைவருக்கும் நீதிபெறும் வாய்ப்பு வழங்குவதும், அனைத்து நிலைகளிலும் திறமிக்க, பொறுப்பான, அனைவருக்குமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதும் அடங்கும். மனிதவுரிமைகளும் நீதியும் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் ஆகிய இவையெல்லாம் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் மலரச் செய்வதற்கு முன்தேவைகளாக அறிந்தேற்கப்படுகின்றன. இவற்றுக்கான ஒப்புக்கொடுப்புதான் 2030 செயல்நிரலின் அச்சாணியாகும்.’

5/1 தீர்மானத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மனிதவுரிமைப் பேரவையின் முதல் குறிக்கோள் ‘களத்தில் மனிதவுரிமைகளை மேம்படுத்துவது’ ஆகும். மாறாக 30/1 தீர்மானம் இயற்றப்பட்டது முதல் சிறிலங்காவில் நாம் கண்டிருப்பது என்னவென்றால் மனிதவுரிமைகள் மேலும் தாழ்ந்து போயுள்ளன. இதில் வியப்பதற்கொன்றுமில்லை.

நிலைமாறுகால நீதி என்பது இனவழிப்பை நிறுத்த விரும்பாத அரசுகளின் உளச்சான்றை சாந்தப்படுத்த பொறுப்பைத் திசைதிருப்பப் பயன்படுகிறது. துயரப்பட்டவர்களுக்கும் உயிர்பிழைத்தவர்களுக்கும் அது பயன்படுவதில்லை என நிலைமாறுகால நீதி அறிஞர் மகாவ் டபிள்யூ. முட்டுவா அவர்கள் ருவாண்டா தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மனிதவுரிமைப் பேரவை தன் கடமையை நிறைவேற்றும் வகையில், நிலைமாறுகால நீதியிலிருந்து நகர்ந்து போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனவழிப்புக் குற்றமும் புரிந்த சிறிலங்கக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் மாறுபட்ட, செயலுக்குகந்த, அணுகுமுறையை, அதாவது ஈடுசெய் நீதியைக் கைக்கொள்வது அவசர அவசியமாகும். நிலைமாறுகால நீதியால் ஒருபோதும் சாதிக்க முடியாததை, ஒருபோதும் சாதிக்காததை ஈடுசெய் நீதியால் சாதிக்க முடியும் என அனைத்துலக சமூகத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

Exit mobile version