சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சூழ்ச்சிக்குள் தமிழினம் சிக்கக்கூடாது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக் கும் பேரினவாதம், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு தமிழினத்தை பயன்படுத்த விளைகின்றது. இந்த சூழ்ச்சி மாயைக்குள் தமிழினம் சிக்கிவிடக்கூடாது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இலக்குமின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி:- கல்முனை உபபிரிவு தரமுயர்த்தப்படுத்துவதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

பதில்:- 1989ஆம் ஆண்டு கல்முனை வடக்கு உபபிரிவு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கல்முனை மாநகரசபை பிரதேசசெயலகம் அனைத்து அதிகாரங்களையும் வளங்களையும் கொண்டு தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்த மாநகரசபை நிருவாகத்தின் கீழ் தமிழர்கள், முஸ்லிம்கள் என கிட்டத்தட்ட 70ஆயிரம் பேர் இருந்தனர்.

இக்காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் 28 உபபிரிவுகளை உருவாக்கும் செயற்றிட்ட மொன்று முன்னெடுக்கப்பட்டது. இதிலொன்றாக கல்முனை வடக்கு உபபிரிவும் உருவாக்கப்பட்டது. எனினும் இந்த உபபிரிவு முழுமையாக தமிழர்களை மையப்படுத்தி யிருந்ததாலோ என்னமோ அதற்கான காணி மற்றும் நிதி கையாளுகைக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழர்கள் அன்றிலிருந்து இந்த உபபிரிவினை தரமுயர்த்தவேண்டும் என்று தொடர்ச்சியாக கோர ஆரம்பித்தார்கள். 1993ஆம் ஆண்டு மட்டக்களப்பினை சேர்ந்த கே.டபிள்யு. தேவநாயகம் என்பவர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தார். அவரின் அழுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட 28 உபபிரிவுகளில் 27 இற்கு சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டபோதும், கல்முனை வடக்கு உபபிரிவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, சகோதர முஸ்லிம் இனத்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி கல்முனை வடக்கு உபபிரிவு தரமுயர்த்தப்பட்டாலும் அதற்கான நிதி, காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு இடமளித்திருக்கவில்லை.
முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக அனைத்து அரசாங்கத்திலும் அங்கம்வகித்து வந்திருந்த மையால் இந்த விடயத்திற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதவாறு மூன்று தசாப்தகாலமாக கல்முனை வடக்கு உபபிரிவு விவகாரம் நீடித்து வந்தது.

தமிழ் மக்கள் இந்தப்பிரிவினை தரமுயர்த்துவதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்திருந்தபோதும், எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்மக்களை வழிநடத்திவருகின்ற தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் போதிய அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கேள்வி:- கல்முனை வடக்கு விவகாரத்தில் தமிழர்கள் எவ்வாறு பௌத்த தேரர்களின் ஆதரவினை பெறும் தீர்மானத்திற்கு வந்தார்கள்?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையொன்று உருவெடுத்திருந்தது. அத்துடன் முஸ்லிம்களை விடவும் சிங்கள மக்களுடன் வாழமுடியும் என்ற மனநிலைத் தோற்றம் சதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இது உண்மையான நிலைமை என்று கொள்ள முடியாது விட்டாலும் சதாரண மக்கள் அவ்வாறான சிந்தனைக்குள் தள்ளப்பட்டிருகின்றார்கள்.

அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதம் முஸ்லிம் பிரதிநிதிகளை பதவிகளிலிருந்து இறக்கி வெற்றிகண்டிருந்தது. இத்தகைய பிரதிபலிப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்ததன் காரணத்தால் தான் தமிழ் மக்கள் கல்முனை வடக்கு விடயத்தில், தேரர்களை நாடினார்கள்.

கல்முனை விகாரதிபதி ரன்முத்துகலவுடன் தமிழ் தரப்பினரும் ஏனைய மதத்தலைவர்களும் இணைந்து உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொண்டார்கள். இதற்கு மட்டக்களப்பு உட்பட தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளும் பூரணமான ஆதரவினையும் அளித்திருந்தன. தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தினை முறையான அணுகுமுறை ஊடாக கையாண்டிருந்தால் எப்போதோ இப்பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, 2015 இற்கு பின்னரான காலத்தில் தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்துடன் பேசி இந்த சிறிய விடயத்திற்கு கூட சரியான தீர்வு அளிக்கவில்லையே என்ற மனவேதனை கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அத்துடன் இத்தகைய மனவிரக்தியும், நம்பிக்கையீனமும் தான் பௌத்த தேரர்களை பயன்படுத்தியாவது தமது கோரிக்கையை சாதித்துக்கொள்வோம் என்ற மனநிலையை உருவாக்கியிருக்கின்றது.

கேள்வி:- கல்முனை தமிழ் பிரிவு விடயத்தில் தீர்வு பெறுவதற்காக தமிழ் மக்கள் பௌத்த தேரர்களை நோக்கிச் சென்றிருக்கின்றமையானது, தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அதற்கு எதிராக போராடுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடாதா?

பதில்:- இந்த விடயத்தில் யதார்த்தமான கருத்துக்கள் இல்லாமலில்லை. கல்முனை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக பௌத்த தேரர்கள் செயற்படுகின்றார்கள். அப்படியிருக்கையில், தமிழ் மக்கள் சொல்லொண்ணாத்துன்பங்களையும், வலிகளையும் அனுபவித்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்பு, இரக்கம், அமைதி போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் பௌத்த தேரர்கள் இந்த நாட்டின் பிறிதொரு இனமும் சமத்துவமாக இருக்க வேண்டும் என்று கருதி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.