Tamil News
Home செய்திகள் சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது

ஈழத்தில் 1.70 இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி தலைமையிலான அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது

கடந்த 2008 -2009-ல் ஈழத்தில் சுமார் 1.70 இலட்சம் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசும், அந்நாட்டின் ராணுவமும் சுட்டுக்கொன்றது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக, சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க கோரியும், ராஜ பக்சே-வை குற்றவாளிகள் கூண்டில் ஏற்றக்கோரியும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போரட்டங்களையும் முன்னெடுத்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தோழமை கட்சிகளும், இயக்கங்களும் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றுள்ளது.

இப்படியான சூழலில், ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று ( 23.3.2021) நடைபெற்றது. இந்த தீர்மானத்தை ஜெர்மனி, கனடா, பிரிட்டன், வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய நாடுகள் முன்னெடுத்தன. 47 உறுப்பு நாடுகள் கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தில், ஜெர்மனி, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 22 நாடுகள், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தனர். அந்நாடுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள், சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக நின்றன. சிங்கள பேரினவாத அரசுக்கு ஏதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது.

சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக தான் இந்திய அரசு நிற்கும் என்பது நமக்கு முன்பே தெரிந்தது தான். இதில் ஏதும் வியப்பொன்றும் இல்லை. ஏனென்றால், சிங்கள பேரினவாத அரசின் பக்க தான் இந்தியா நிற்க போகிறது என்பது, கடந்த 19-ஆம் தேதியே, இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறிவிட்டார். மேலும், ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல், புறக்கணித்தாலே போதும் என்று இந்தியா அரசுக்கு கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதாவது மறைமுகமாக சிங்கள பேரினவாத அரசுக்கு, மோடி அரசு துணை போயியுள்ளது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகத்தமிழர்களுக்கும் துரோகமிழைத்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மோடி தலைமையிலான அரசு, தமிழர்களை உதாசீனப்படுத்திவிட்டது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணிக்கு நாம் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என தமிழக மக்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்தி, சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிகள் கூண்டில் நிறுத்த, இந்திய அரசு முன் வர வேண்டும்.

இந்த கோரிக்கையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தோழமை கட்சிகளை திரட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

 

Exit mobile version